PAK vs ENG : 2வது டெஸ்டில் தராசு போல் சமமாக நிற்கும் வெற்றி, முக்கிய நேரத்தில் மாஸ் காட்டி வெல்லப்போவது யார் – விவரம் இதோ

- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் 17 வருடங்கள் கழித்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் இங்கிலாந்து முதல் போட்டியில் தார் ரோடு போல இருந்த பிட்ச்சில் அதிரடியாக செயல்பட்டு முதல் நாளிலேயே 506 ரன்கள் குவித்து 2வது இன்னிங்ஸில் முக்கிய நேரத்தில் தைரியமாக டிக்ளேர் செய்து 74 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அந்த நிலையில் டிசம்பர் 9ஆம் தேதியன்று நடைபெற்ற 2வது போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. இருப்பினும் இப்போட்டி நடைபெறும் முல்தான் கிரிக்கெட் மைதானம் சற்று சுழலுக்கு சாதகமாக இருந்ததால் தடுமாறிய அந்த அணி அதிரடியாக விளையாடினாலும் 281 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

அதிகபட்சமாக பென் டன்கட் 63 ரன்களும் ஓலி போப் 60 ரன்களும் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக அறிமுகப் போட்டியில் களமிறங்கி சுழலில் மாயாஜாலம் நிகழ்த்திய அப்ரார் அகமது 7 விக்கெட்டுகளை சாய்த்து அசத்தினார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 75 ரன்களும் ஷாகீல் 63 ரன்களும் எடுத்ததால் ஒரு கட்டத்தில் 142/2 என்ற நல்ல நிலைமையில் இருந்தது. ஆனால் அவர்கள் அவுட்டானதை பயன்படுத்திய இங்கிலாந்து அடுத்து வந்த முகமது ரிஸ்வான் 10, சல்மான் 4 போன்ற முக்கிய வீரர்களை சொற்ப ரன்களில் காலி செய்து பாகிஸ்தானை 202 ரன்களுக்கு சுருட்டி அமர்க்களப்படுத்தியது.

- Advertisement -

சமமான வெற்றி:
அதிகபட்சமாக ஜேக் லீச் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதை தொடர்ந்து 79 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை துவங்கிய இங்கிலாந்துக்கு ஒருபுறம் ஜாக் கிராவ்லி 3, வில் ஜேக்ஸ் 4, ஜோ ரூட், ஓலி போப் 4 என முக்கிய வீரர்கள் பெரிய ரன்களை எடுக்க தவறினாலும் கூட தொடக்க வீரர் பென் டன்கட் 79 (98) ரன்களும் மிடில் ஆர்டரில் அசத்திய ஹரி ப்ரூக் சதமடித்து 108 (149) ரன்களும் எடுத்தனர். அதனால் முடிந்த அளவுக்கு போராடிய அந்த அணி 2வது இன்னிங்ஸில் 275 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் மீண்டும் அசத்திய அப்ரார் அக்பர் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

அதை தொடர்ந்து 355 என்ற இலக்கை சேசிங் செய்ய துவங்கிய பாகிஸ்தானுக்கு 66 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நம்பிக்கை கொடுத்த முகமது ரிஸ்வான் 30 ரன்களில் ஜாம்பவான் ஜேம்ஸ் ஆண்டர்சனிடம் அவுட்டாக அசாத் சபிக் 45 ரன்களில் மார்க் வுட் வேகத்தில் அவுட்டாகி சென்றார். அப்போது வந்த கேப்டன் பாபர் அசாம் 1 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி கொடுத்தாலும் 4வது விக்கெட்டுக்கு நங்கூரத்தை போட்டு 108 ரன்கள் அற்புதமான பார்ட்னர்ஷிப் அமைத்து பாகிஸ்தானை மீட்டெடுத்த இமாம்-உல்-ஹக் அரை சதமடித்து 60 ரன்களில் அவுட்டானார். அவருடன் விளையாடிய ஷாகீல் 54* ரன்களும் அஸ்ரப் 3* ரன்களும் எடுத்த போது 3வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

- Advertisement -

தற்சமயத்தில் 198/4 என்ற நிலையில் உள்ள பாகிஸ்தானுக்கு வெற்றிக்கு மேற்கொண்டு 157 ரன்கள் தேவைப்படுகிறது. மறுபுறம் இங்கிலாந்துக்கு 6 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. இன்னும் இப்போட்டியில் 2 நாட்கள் எஞ்சியிருப்பதால் இப்போட்டி ட்ராவில் முடிவடையும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. அதிலும் குறிப்பாக நாளைய 4வது நாளில் முடிவு கிடைத்து விடும் என்று எதிர்பார்க்கப்படும் இப்போட்டியில் தற்சமயத்தில் வெற்றி இருதரப்புக்கும் சரிசமமாக தராசு முள் போல் இருக்கிறது என்றும் சொல்லலாம்.

ஏனெனில் 4வது நாள் உணவு இடைவெளி வரை நங்கூரமாக நின்று மேற்கொண்டு விக்கெட்டை விடாமல் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே 157 ரன்களை எளிதாக எடுத்து பாகிஸ்தானால் வெற்றி பெற முடியும். ஆனால் ஒரு சில விக்கெட்டுகளை இழக்கும் பட்சத்தில் தற்போது களத்தில் இருக்கும் வீரர்களை தவிர்த்து அடுத்ததாக பாகிஸ்தானிடம் பெரிய பேட்ஸ்மேன்கள் இல்லை.

அத்துடன் இது போன்ற கடைசி நேரங்களில் 10 விக்கெட்டுகள் கையில் இருந்தாலும் அதிகப்படியான அழுத்தத்தில் வெறும் 50 ரன்கள் சேசிங் செய்வது கூட கடினமாகும். மறுபுறம் இப்போட்டியில் ஆரம்பம் முதலே பாகிஸ்தானை விட சிறப்பாக செயல்பட்டு வரும் இங்கிலாந்து அந்த அழுத்தத்தை பயன்படுத்தி இப்போட்டியிலும் வென்று தொடரை கைப்பற்றி சாதனை படைக்க அதிக வாய்ப்புள்ளது.

Advertisement