
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை வரும் நவம்பர் மாதம் துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2 டெஸ்ட் தொடர்களையும் முதல் முறையாக வென்று இந்தியா சரித்திரம் படைத்தது. அந்த வரிசையில் இம்முறை மீண்டும் வென்று ஆஸ்திரேலியாவில் ஹாட்ரிக் வெற்றியை இந்தியா பெறுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
ஆனால் அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் ஷமி இல்லாதது பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதை விட பேட்டிங் துறையின் முதுகெலும்பாக கருதப்படும் விராட் கோலி தற்சமயத்தில் சுமாரான ஃபார்மில் இருப்பதும் ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக 2021 ஜனவரி மாதம் வில்லியம்சன், ஸ்மித், ரூட் ஆகியோரை விட விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் சதங்கள் அடித்திருந்தார்.
இருப்பினும் தற்போது அந்த மூவரை விட விராட் கோலி தான் 4வது இடத்தில் பின்தங்கியுள்ளார். மேலும் தற்போது நடைபெற்று வரும் நியூசிலாந்து தொடரில் அவர் பெரிய ரன்கள் குவித்து தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் நியூஸிலாந்துக்கு எதிராக முதல் முறையாகவும் சொந்த மண்ணில் 12 வருடங்கள் கழித்தும் இந்தியா ஒரு டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்திக்க விராட் கோலி முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்நிலையில் விராட் கோலி இங்கே தடுமாறினாலும் வேகத்துக்கு சாதகமான மைதானங்களை கொண்ட ஆஸ்திரேலியாவில் கில்லியாக அசத்துவார் என்று முன்னாள் தேர்வுக்குழு தலைவர் எம்எஸ்கே பிரசாத் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி ஆஸ்திரேலியாவில் தண்ணீருக்குள் செல்லும் வாத்தைப் போல இருப்பார். ஏனெனில் அங்குள்ள சூழ்நிலைகளை அவர் விரும்புவார்”
“தற்போதைய நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக மும்பையில் நடைபெறும் கடைசி போட்டியை முடித்து விட்டு அவர் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல விரும்புவார். அவர் அங்குள்ள சவால்களை விரும்புவார். சில நேரங்களில் சாம்பியன் கிரிக்கெட்டர்கள் உலகின் சிறந்த அணிகளுக்கு எதிராக சிறந்த பவுலிங் அட்டாக்கிற்கு எதிராக அசத்த விரும்புவார்கள். அந்த வகையில் ஆஸ்திரேலியாவை அவர் கண்டிப்பாக விரும்புவார்”
இதையும் படிங்க: 2021இல் காபாவை வெச்சு அஸ்வினை ஸ்லெட்ஜ் செஞ்சதுக்கு வருத்தப்படல.. பயத்தால் ஓடிருக்கலாம்.. டிம் பைன்
“சொல்லப்போனால் 2018 தொடரில் அடிலெய்ட் நகரில் நடைபெற்ற ஒரு போட்டியில் ரோகித் சர்மாவும் அற்புதமான இன்னிங்ஸ் விளையாடினார். எனவே அவர்கள் முன்னோக்கி வந்து அசத்தா விட்டால் இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்கள் தடுமாறக் கூடும். விராட், ரோஹித் ஆகிய இருவரின் பேட்டிங் ஸ்டைலும் ஆஸ்திரேலியாவில் உள்ள சூழ்நிலைகளுக்கு கச்சிதமாக பொருந்தும். கடினமான பவுன்ஸை அந்த இருவருமே விரும்புவார்கள்” என்று கூறினார்.