ஓடி வந்த விசாகப்பட்டின மைதான பராமரிப்பாளர்களுக்கு தோனி கொடுத்த பரிசு.. நெகிழ்ச்சியான 19 வருட பின்னணி

MS Dhoni Vizag
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நடப்பு சாம்பியன் சென்னையை 20 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த டெல்லி முதல் வெற்றியை பதிவு செய்தது. விசாகப்பட்டினத்தில் மார்ச் 31ஆம் தேதி நடைபெற்ற அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி 192 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதை சேசிங் செய்த கேப்டன் ருதுராஜ் 1, ரச்சின் 2, சமீர் ரிஸ்வி 0 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

அதனால் ரகானே 45, டேரில் மிட்சேல் 34, சிவம் துபே 18, ஜடேஜா 21*, எம்எஸ் தோனி 37* ரன்கள் அடித்துப் போராடியும் 20 ஓவரில் 171/6 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை முதல் தோல்வியை சந்தித்தது. டெல்லி சார்பில் அதிகபட்சமாக முகேஷ் குமார் 3 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக இந்த போட்டியில் தோனி பேட்டிங் செய்த விதம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்தது.

- Advertisement -

நெகிழ்ச்சியான செயல்:
ஏனெனில் முதலிரண்டு போட்டிகளில் பேட்டிங் செய்யாத அவர் இப்போட்டியில் கடைசி நேரத்தில் களமிறங்கி அதிரடியாக 4 பவுண்டரி 3 சிக்சருடன் 37* (16) ரன்கள் அடித்து அசத்தினார். குறிப்பாக அன்றிச் நோர்ட்ஜே வீசிய கடைசி ஓவரில் 4, 6, 0, 4, 0, 6 என 4 பவுண்டரிகளை பறக்க விட்டு 20 ரன்கள் அடித்த அவர் 42 வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபித்து ரசிகர்களை கொண்டாட வைத்தார்.

அப்படி அதிரடியாக விளையாடிய அவரிடம் போட்டி முடிந்ததும் டெல்லி வீரர்கள் சுற்றி நின்று தங்களுக்கு தேவையான சில ஆலோசனைகளை பெற்றுக் கொண்டனர். அதைத்தொடர்ந்து விசாகப்பட்டினம் மைதானப் பராமரிப்பாளர்கள் புகைப்படம் எடுப்பதற்காக தோனியிடம் கோரிக்கை வைத்தனர். அதற்கு கொஞ்சம் கூட யோசிக்காத தோனி உடனடியாக அவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

- Advertisement -

குறிப்பாக 2004இல் இந்தியாவுக்காக சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான தோனி முதல் போட்டியிலே டக் அவுட்டானத்தைப் பற்றி யாருக்கும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அதே போல ஆரம்பக்கட்ட போட்டிகளில் தடுமாறிய தோனி 2005ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக இதே விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் 15 பவுண்டரி 4 சிக்சரை தெறிக்க விட்டு 148 (123) ரன்கள் விளாசி தன்னுடைய முதல் சதத்தை அடித்தார்.

இதையும் படிங்க: விண்டேஜ் தோனி.. 42 வயசு தான் ஆகுதா? வர்ணிக்க வார்த்தையில்ல.. கண்டிப்பா அதை செய்வாரு.. ஸ்ரீகாந்த் பாராட்டு

அந்த வகையில் தோனியின் உண்மையான வெற்றிப் பயணம் விசாகப்பட்டினத்தில் தான் துவங்கியது என்றே சொல்லலாம். அதை 19 வருடங்கள் கடந்தாலும் மறக்காத தோனி விசாகப்பட்டினம் மைதானப் பராமரிப்பாளர்கள் கேட்டதும் யோசிக்காமல் புகைப்படம் எடுத்துக் கொள்ள சம்மதம் தெரிவித்தார். அதனால் மைதானத்தின் பல்வேறு இடங்களில் பரவியிருந்த பராமரிப்பாளர்கள் வேகமாக ஓடி வந்து ஆர்வத்துடன் தோனியுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

Advertisement