விராட் கோலியை மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய தல தோனி – நம்ம ஆளு ஸ்கெட்ச் மிஸ் ஆகாது

Virat Kohli vs CSK
- Advertisement -

பரபரப்பாக நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 12-ஆம் தேதியான நேற்று நடந்த 22-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. நவி மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த போட்டியில் அதிரடியாக செயல்பட்ட சென்னை 23 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 4 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் வெற்றியை பதிவு செய்து 2 பொன்னான புள்ளிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் 10-வது இடத்திலிருந்து 9-வது இடத்திற்கு முன்னேறி நிம்மதி அடைந்தது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்து 216/4 ரன்கள் குவித்தது. குறிப்பாக அந்த அணியின் தொடக்க வீரர் ருதுராஜ் 17 (16) மொய்ன் அலி 3 (8) என சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 36/2 என தடுமாறி அந்த அணியை அடுத்து களமிறங்கிய இளம் வீரர் சிவம் துபே மற்றொரு தொடக்க வீரர் ராபின் உத்தப்பாவுடன் இணைந்து போராடி மீட்டுடெடுக்க முயற்சித்தார்.

- Advertisement -

அசத்திய உத்தப்பா – துபே:
ஆரம்பத்தில் நிதானமாக பொறுமையைக் கையாண்ட இந்த ஜோடி நேரம் செல்ல செல்ல பெங்களூர் பவுலர்களை புரட்டி எடுத்து அதிரடியாக ரன் மழை பொழிந்தது. குறிப்பாக 10 ஓவர்களுக்கு பின் விஸ்வரூபம் எடுத்த இந்த ஜோடி பவுண்டரிகளை விட அதிக சிக்சர்களை பறக்க விட்டு சரவெடியாக ரன்களைச் சேர்த்தனர். தொடர்ந்து பட்டைய கிளப்பிய இந்த ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 165 பார்ட்னர்ஷிப் ரன்கள் சேர்த்து சரிந்த சென்னையை தூக்கி நிறுத்திய போது 50 பந்துகளில் 4 பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர் உட்பட 88 ரன்கள் எடுத்த உத்தப்பா ஆட்டமிழந்தார்.

மறுபுறம் தொடர்ந்து பெங்களூருவை புரட்டி எடுத்த சிவம் துபே கடைசி வரை அவுட்டாகாமல் 46 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 8 சிக்சர் உட்பட 95* ரன்கள் விளாசினார். இதனால் முதல் 10 ஓவர்களில் 60/2 என தவித்த சென்னை அடுத்த 10 ஓவர்களில் 156/2 ரன்களை அடித்து நொறுக்கி 20 ஓவர்களில் 216/4 என்ற மிகப் பெரிய ஸ்கோரை எட்டியது. அதை தொடர்ந்து 217 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு தொடக்க வீரர் மற்றும் கேப்டன் டு பிளசிஸ் 8 (9) ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த நட்சத்திரம் விராட் கோலி 1 (3) ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார்.

- Advertisement -

சென்னை மாஸ் வெற்றி:
போதாக்குறைக்கு நட்சத்திர வீரர் கிளென் மேக்ஸ்வெல் அதிரடியாக விளையாட முயன்று 26 (11) ரன்களில் அவுட்டாக மற்றொரு தொடக்க வீரர் அனுஜ் ராவத் 12 ரன்களில் நடையை கட்டினார். இதனால் 50/4 என ஆரம்பத்திலேயே தடுமாறிய பெங்களூருவுக்கு மிடில் ஆர்டரில் களமிறங்கிய இளம் வீரர்கள் சபாஸ் அஹமட் 41 (27), பிரபு தேசாய் 34 (14) என அதிரடியாக பேட்டிங் செய்த போதிலும் சென்னையின் அதிரடி பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் வெறும் 14 பந்துகளில் 2 பவுண்டரி 3 சிக்சருடன் 34 ரன்கள் எடுத்து அச்சுறுத்தலை கொடுத்து ஆட்டமிழந்ததால் 20 ஓவர்களில் 193/9 ரன்களை மட்டுமே எடுத்த பெங்களூரு போராடி தோற்றது.

சென்னை சார்பில் பந்துவீச்சில் அசத்திய மகேஷ் தீக்சனா 4 விக்கெட்டுகளையும் ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினார். இந்த அற்புதமான வெற்றியில் 95* ரன்கள் குவித்து முக்கிய பங்காற்றிய ஷிவம் துபே ஆட்டநாயகன் விருதை வென்றார். மறுபுறம் பவுலிங் மற்றும் பேட்டிங்கில் சொதப்பிய பெங்களூரு இந்த போட்டியில் தோற்றாலும் 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பதிவு செய்துள்ளதால் 6 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் தொடர்ந்து 5-வது இடத்தில் உள்ளது.

மாஸ்டர் பிளான்:
முன்னதாக இந்த போட்டியில் சென்னையின் நட்சத்திரம் எம்எஸ் தோனி 1 ரன் கூட அடிக்கவில்லை என்றாலும் பெங்களூருவின் நட்சத்திரம் விராட் கோலியை 1 ரன்னில் அவுட்டாக முக்கிய மூளையாக செயல்பட்டு சென்னையின் வெற்றியில் பங்காற்றினார். அதாவது 217 என்ற இலக்கை துரத்திய பெங்களூருவுக்கு டுப்லஸ்ஸிஸ் 8 ரன்களில் அவுட்டாக அடுத்து களமிறங்கிய விராட் கோலி அதிரடியாக விளையாடும் முனைப்பில் களமிறங்கினார்.

குறிப்பாக 4-வது ஓவரை இளம் வீரர் முகேஷ் சவுத்ரி வீச வந்த நிலையில் அதை விராட் கோலி எதிர்கொள்வதற்கு முன்பாக டீப் ஸ்கொயர் லெக் பகுதியில் எந்த பீல்டரும் இல்லாததை பார்த்த எம்எஸ் தோனி அந்த இடத்தில் அவர் பிளிக் ஷாட் அடிக்க அதிக வாய்ப்புள்ளது என்பதை கணித்து ஷிவம் துபேவை அங்கே நிறுத்தினார். அடுத்த பந்திலேயே சொல்லி வைத்தார் போல் பிளிக் ஷாட் ஆடிய விராட் கோலி தோனியின் மாஸ்டர் பிளானில் சிக்கி சிவம் துபேவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதை ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனை செய்தவர்கள் விளக்கிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது.

Advertisement