ஐக்கிய அரபு நாடுகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ஆசிய கோப்பையில் பரம எதிரியான பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடிக்க 3 விக்கெட்டுகளையும் 33* ரன்களையும் எடுத்து முக்கிய பங்காற்றிய ஹர்திக் பாண்டியா இந்தியாவின் தலை நிமிர வைத்தார். அதனால் கடந்த வருடம் இதே மைதானத்தில் பாகிஸ்தானிடம் உலக கோப்பையில் முதல் முறையாக வரலாற்று தோல்வியை இந்தியா சந்திக்க முக்கிய காரணமாக இருந்த அவர் அதற்கு பதிலடியாக செயல்பட்டார் என்றே கூறலாம். ஏனெனில் அப்போட்டியில் ஒரு ஓவர் கூட பந்து வீசாத அவர் பேட்டிங்கிலும் சுமாராக செயல்பட்டது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது.

அதனால் அதிரடியாக அணியிலிருந்து நீக்கப்பட்ட அவர் அதற்காக மனம் தளராமல் கடுமையான பயிற்சிகளை எடுத்து ஐபிஎல் தொடரில் தன்னை 15 கோடிக்கு நம்பி வாங்கிய குஜராத் அணிக்கு 487 ரன்களையும் 8 விக்கெட்டுகளை எடுத்து மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராகவும் அனுபவமில்லாத கேப்டன்ஷிப் பதவியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக வழிநடத்தி முதல் வருடத்திலேயே கோப்பையை வென்று காட்டினார். அதனால் மீண்டும் இந்திய அணிக்குள் கம்பேக் கொடுத்த அவர் தென் ஆப்பிரிக்கா, அயர்லாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் என அதன்பின் நடந்த அத்தனை டி20 தொடர்களிலும் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றினார்.
தோனியின் வளர்ப்பு:
கம்பேக் கொடுத்தபின் 3 வகையான கிரிக்கெட்டிலும் ஒரு போட்டியில் 50+ ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்த முதல் இந்திய வீரர், டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஒரு போட்டியில் 30+ ரன்கள் மற்றும் 3 விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரர் போன்ற தரமான சாதனைகளை படைத்துள்ள அவர் தன்னை மிகச் சிறந்த ஆல்-ரவுண்டராக மீண்டும் நிரூபித்து வருகிறார். கடந்த 2016இல் அறிமுகமாகி அடுத்த சில வருடங்களிலேயே 3 வகையான இந்திய அணியிலும் சிறப்பாக செயல்பட்டு ஜாம்பவான் கபில் தேவுக்கு பின் தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் கிடைத்துவிட்டார் என்று இந்திய ரசிகர்கள் கொண்டாடும் அளவுக்கு அசத்திய அவர் 2019 உலகக்கோப்பைக்கு பின் சந்தித்த காயத்தால் இப்போதும் கூட தேவையான நேரத்தில் மட்டுமே பந்து வீசி வருகிறார்.

இருப்பினும் முக்கிய தருணத்தில் கச்சிதமாக செயல்படும் அவர் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சை துறையில் சம நிலையை ஏற்படுத்தும் விலைமதிப்பு மிக்க வீரராக உருவெடுத்துள்ளார். அதனால் ஜாம்பவான் ஜாக் காலிஸ் உடன் ஒப்பிடும் அளவுக்கு வளர்ந்துள்ள அவர் தன்னுடைய வளர்ச்சியில் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி முக்கிய பங்காற்றியுள்ளதாக வெளிப்படையாக பேசியுள்ளார்.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பினிஷிங் செய்த பின்பு அந்த திறமைகளை தோனியிடம் இருந்து கற்றுக் கொண்டதாக ஏற்கனவே தெரிவித்திருந்த அவர் இது பற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “நான் இந்த வாழ்க்கை மற்றும் விளையாட்டை கற்றுக்கொள்ள துவங்கியுள்ள ஒரு புதிய குழந்தையாவேன். என்னுடைய வளர்ச்சியில் எம்எஸ் தோனி மிகப்பெரிய பங்காற்றியுள்ளார். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் அவருடன் விளையாடி அழுத்தத்தை எவ்வாறு உள்வாங்கி சமாளிப்பது என்பதை கற்றுக்கொண்டேன். அவர் கொண்டிருந்த எண்ணம் மற்றும் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட நுணுக்கங்கள் எனக்குள்ளும் களத்தில் எதிரொலிப்பதாக நினைக்கிறேன்”

“நான் எப்போதும் எனது தவறுகளை ஏற்றுக்கொண்டு தோல்வியடைந்து அதிலிருந்து பாடங்களை கற்றுக் கொள்கிறேன். சில நேரங்களில் தோல்வி தான் உங்களுக்கு பாடங்களை கற்றுக் கொடுக்கிறது. சில நேரங்களில் உங்களுக்கு உதவியும் கிடைக்காது. தோனியும் அதை சந்தித்துள்ளார். சில தோல்விகளை நீங்கள் அனுபவிக்கும் போது பாடங்களை கற்றுக் கொள்வீர்கள்”
“அந்த அவ்வகையில் சரிவுக்கு பின் எனது வாழ்க்கை எந்தளவுக்கு வடிவமமைந்தது என்பதை என்னால் வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. அந்த மோசமான தருணங்கள் நான் பாடங்களை கற்றுக்கொண்ட நேரமாகும். ஒரு ஹோட்டலுக்கு சென்று சுவையான உணவை அருந்தும் உங்களுக்கு அதை உண்டு முடிக்கும் போது பினிஷிங் டச் இல்லை என்றால் அது சுவையாக இருக்காது. அதே போல் தான் களத்தில் வெற்றியை நெருங்கினாலும் நீங்கள் திடமானவராக இருந்தாலும் லோயர் ஆர்டர் அல்லது பினிஷராக இருக்கும் நீங்கள் பினிஷிங் டச் செய்யவில்லை என்றால் அந்த வேலை சுவையாக இருக்காது” என்று கூறினார்.

கடந்த 2016இல் ஆஸ்திரேலிய மண்ணில் தனது தலைமையில் அறிமுகமான ஹர்திக் பாண்டியாவின் திறமையை உணர்ந்த தோனி முதல் போட்டியில் சுமாராக செயல்பட்டாலும் தொடர்ச்சியாக வாய்ப்பளித்தார். அத்துடன் குறைந்தளவு போட்டிகளில் மட்டுமே விளையாடியிருந்த போதிலும் அடுத்த சில மாதங்களில் நடைபெற்ற உலகக்கோப்பையில் அவரை தேர்வு செய்து கொடுத்த ஆதரவை தான் ஹர்திக் பாண்டியா தற்போது மறக்காமல் பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



