அவருக்கு மட்டும்தான் பெயர், புகழ்! தோனி மட்டும் ஒற்றை கையால் வாங்கினாரா? – 2011 உ.கோ பற்றி முன்னாள் வீரர்

2011-final
- Advertisement -

இந்தியாவில் இன்று கிரிக்கெட் இந்த அளவுக்கு ஆலமரமாய் வளர்ந்து நிற்பதற்கு கடந்த 1983-ஆம் ஆண்டு ஜாம்பவான் கபில்தேவ் வென்று கொடுத்த முதல் உலக கோப்பை தான் ஆழமான விதை போட்டது என்றே கூறலாம். அந்த அளவுக்கு ஒவ்வொரு இந்தியனின் மனதிலும் ஒரு மேஜிக் நிகழ்த்திய அந்த உலகக் கோப்பையை அதன்பின் முகமது அசாருதீன், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கேப்டன்ஷிப் செய்தபோதிலும் வெல்ல முடியவில்லை. அந்த நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பையில் எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி சொந்த மண்ணில் களமிறங்கியது.

worldcup

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர், வீரேந்திர சேவாக், ஜாகீர் கான், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா என அனுபவமும் இளமையும் கலந்து எதிரணிகளை கில்லியாக சொல்லி அடித்த இந்தியா லீக் மற்றும் நாக்-அவுட் சுற்றில் அசத்தி இறுதிப் போட்டியில் இலங்கையை எதிர்கொண்டது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த மாபெரும் இறுதிப்போட்டியில் அந்த அணி நிர்ணயித்த 275 ரன்கள் இலக்கை துரத்திய இந்தியா ஆரம்பத்தில் தடுமாறினாலும் கௌதம் கம்பீர் (97) மற்றும் எம்எஸ் தோனி ஆகியோர் இணைந்து (91*) சிறப்பாக விளையாடி 28 வருடங்கள் கழித்து மீண்டும் உலக கோப்பையை முத்தமிட முக்கிய பங்காற்றினார்.

கலக்கல் தோனி:
அந்த உலக கோப்பையில் அதுவரை ஒரு அரைசதம் கூட அடிக்க முடியாமல் திண்டாடி வந்த கேப்டன் எம்எஸ் தோனி இறுதிப்போட்டியில் இந்தியா தடுமாறிய நிலையில் யாருமே எதிர்பாராத வண்ணம் யுவராஜ் சிங்கிற்கு முன்பாக களமிறங்கி அதிரடியாக விளையாடி 91* ரன்கள் குவித்து கடைசி வரை அவுட்டாகாமல் அபார பினிஷிங் செய்து இந்தியாவை வெற்றி பெற வைத்தார். அதிலும் கடைசியில் அவர் சிக்ஸர் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த போது அதை ரவிசாஸ்திரி வர்ணனை செய்ததையும் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட அனைத்து வீரர்களும் மைதானத்திற்குள் வந்து ஆரவாரத்துடன் கொண்டாடி கோப்பையை வென்றதையும் இப்போது நினைத்தால் கூட இந்திய ரசிகர்களுக்கு புல்லரிக்கும்.

அப்படி அற்புதமான பினிசிங் கொடுத்த எம்எஸ் தோனி அந்த மாபெரும் இறுதிப் போட்டியின் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மேலும் அந்த உலக கோப்பை முழுவதும் அபாரமாக செயல்பட்ட யுவராஜ் சிங் தொடர் நாயகன் விருதை வென்றார். அந்த பொன்னான தருணம் நிகழ்ந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் அந்த உலகக் கோப்பையை பற்றி யார் எங்கே எப்போது பேசினாலும் பைனலில் 91* ரன்கள் அடித்து சிக்சருடன் பினிஷிங் செய்து கோப்பையை வென்று கொடுத்த எம்எஸ் தோனியின் பெயர்தான் முதலாக வருகிறது.

- Advertisement -

ஒற்றை கையில் வாங்கினாரா:
அவருக்கு முன்பாக அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்த போது நிலைத்து நின்று ஆடிய கௌதம் கம்பீர் மற்றும் அந்த உலகக் கோப்பையில் பல்வேறு தருணங்களில் அசத்திய இதர வீரர்களைப் பற்றி யாரும் பெரும்பாலும் பேசப்படுவதில்லை என ஒரு சில ரசிகர்கள் இப்போதும் குற்றம்சாட்டி வருகின்றனர். தற்போது அதுபற்றி அந்த உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றிய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் நேரடியாகவே விமர்சித்துள்ளார்.

harbhajan 1

இது பற்றி தற்போது ஸ்டார்ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் வர்ணனையாளராக செயல்பட்டு வரும் அவர் ஒரு போட்டிக்கு பின்பு பேசியது பேசியது பின்வருமாறு. “உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா வென்றால் அனைவரும் ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது என பேசினார்கள். ஆனால் இந்தியா உலக கோப்பையை வென்றபோது ‘அனைவரும் எம்எஸ் தோனி தான் உலக கோப்பையை வென்று கொடுத்தார்’ எனக் கூறினார்கள். அப்படியானால் அணியில் எஞ்சியிருந்த 10 பேர் ஜிகர்தண்டா சாப்பிட சென்றிருந்தார்களா? மற்ற 10 பேரும் என்ன செய்தார்கள்? கௌதம் கம்பீர் என்ன செய்தார்? இது ஒரு அணி விளையாட்டு. இதில் 7 – 8 வீரர்கள் சேர்ந்து விளையாடினால் தான் வெற்றி கிடைக்கும்” என கூறினார்.

- Advertisement -

அவர் கூறுவது போல 2011 உலக கோப்பையின் முதல் போட்டியில் வீரேந்திர சேவாக் மற்றும் விராட் கோலி ஆகியோர் அதிரடி சதம் விளாசி அற்புதமான தொடக்கம் கொடுக்க அதன்பின் சச்சின் டெண்டுல்கர் சதமடித்து இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார். மேலும் நாக் அவுட் போட்டிகளில் சுரேஷ் ரெய்னா 30+ ரன்கள் அடித்தாலும் முக்கியமானதாக இருந்தது. அதேபோல் பந்துவீச்சில் பந்துவீச்சில் ஜாஹிர் கான், முனாப் படேல், ஹர்பஜன்சிங் அசத்திய நிலையில் தொடர் முழுவதும் யுவராஜ் கலக்கினார். மொத்தத்தில் அனைவருமே சேர்ந்து செயல்பட்டதாலேயே 28 வருடங்கள் கழித்து இந்தியாவால் உலக கோப்பையை முத்தமிட முடிந்தது.

இதையும் படிங்க : இந்த சீசனில் மும்பை அணியின் தொடர் தோல்விகளுக்கு இதுதான் காரணம் – பும்ரா விளக்கம்

அதேசமயம் பைனலில் மட்டும் சிறப்பாக விளையாடியதற்காக நான் தான் உலக கோப்பையை தனியாளாக வென்று கொடுத்தேன் என்று தோனி எப்போதும் கூறி பெயரையும் பெருமையையும் புகழையும் பெற்றுக் கொண்டதில்லை என்ற நிலையில் ரசிகர்கள் பேசுகிறார்கள் என்பதற்காக ஹர்பஜன் சிங் இவ்வாறு பேசுவதில் எந்த நியாயமும் இல்லை.

Advertisement