இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சர்வதேச அரங்கில் 27000 ரன்கள் 82 சதங்கள் அடித்து நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். அப்படிப்பட்ட அவர் யானைக்கும் அடி சறுக்கும் என்பதற்கு சான்றாக 2019க்குப்பின் சதமடிக்க முடியாமல் தடுமாறினார். அது போக இந்தியாவுக்காக ஐசிசி கோப்பையை வெல்லத் தவறிய அவர் ஐபிஎல் கோப்பையையும் பெங்களூரு அணியின் கேப்டனாக வெல்லவில்லை.
அதனால் விராட் கோலி இருக்கும் வரை இந்தியாவால் கோப்பையை வெல்ல முடியாது என்ற விமர்சனங்கள் இருந்தன. அத்துடன் வருடக்கணக்கில் சதத்தை அடிக்க தடுமாறும் விராட் கோலி ஓய்வு பெற வேண்டும் என்றும் விமர்சிக்கப்பட்டன. அதனால் டி20 கிரிக்கெட்டில் மட்டும் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்த அவர் டெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்வதாக அறிவித்தார்.
தோனியின் மெசேஜ்:
ஆனால் அப்போது வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கு 2 கேப்டன்கள் தேவையில்லை என்று கருதிய பிசிசிஐ ஒருநாள் கேப்டன்ஷிப் பொறுப்பை விராட் கோலியிடம் இருந்து பறித்து ரோஹித் சர்மாவிடம் ஒப்படைத்தது. அதனால் மனமுடைந்த விராட் கோலி பனிச்சுமை என்பதைக் காரணமாகச் சொல்லி டெஸ்ட் கேப்டன்ஷிப் பதவியையும் ராஜினாமா செய்தார்.
மேலும் அந்த மோசமான காலகட்டங்களில் தோனி மட்டுமே தமக்கு மெசேஜ் செய்து ஆதரவு கொடுத்ததாக விராட் கோலி கூறியிருந்தார். இந்நிலையில் 2022இல் விராட் கோலிக்கு தாம் அனுப்பிய மெசேஜ் என்ன என்பதைச் சொல்ல தோனி மறுத்து விட்டார். இருப்பினும் அந்த சமயத்தில் விராட் கோலி தேவைப்பட்ட ஆதரவு பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
கோலி – தோனி நட்பு:
“நான் மெசேஜ் பற்றி பேச மாட்டேன் உறவுமுறைப் பற்றி பேசுவேன். இதை இப்படியே வைத்திருக்க விரும்புகிறேன். அது மற்ற வீரர்கள் என்னிடம் வந்து அவர்கள் மனதில் ஏதாவது இருக்கிறதா? என்று கேட்க அனுமதிக்கிறது. என்னிடம் சொல்வது வெளியே வராது, அதை மூன்றாவது நபர் அறிய மாட்டார் என்று அவர்கள் நம்புகின்றனர். அது போன்ற நம்பிக்கை முக்கியம். அவர்களுடன் நீங்கள் விளையாட விட்டாலும் கிரிக்கெட், வாழ்க்கையைப் பற்றிய விஷயங்களில் உதவி தேவைப்படலாம்”
“நானும் விராட் கோலிக்கும் ஆரம்பத்தில் இருந்தே வெற்றிகளில் பங்காற்ற விரும்புவோம். விராட் கோலி எப்போதும் 40 – 60 ரன்களில் மகிழ்ச்சியடைய மாட்டார். சதத்தை அடித்து கடைசி வரை களத்தில் இருக்க விரும்புவார். அப்படிப்பட்ட பசியை ஆரம்பத்தில் இருந்தே கொண்டிருந்த அவர் வேகமாக ஆட்டத்தை முன்னேற்றி தொடர்ந்து ரன்கள் குவித்தார். ஃபிட்னஸ் லெவலை முன்னேற்றினார்”
“இங்கே எதை வித்தியாசமாக செய்ய முடியும்? என்பது போன்ற விஷயங்களை என்னிடம் பேசுவார். அது எங்களுடைய திறந்த மனதை உருவாக்கியது. அவருக்கு நேர்மையான கருத்துக்களை வழங்கினேன். அப்படித்தான் எங்களுடைய உறவு வளர்ந்தது. ஆரம்பத்தில் கேப்டன் – புதிய வீரர் என்று துவங்கிய நாங்கள் நிறைய பேசிய போது நண்பர்களாக மாறினோம்”
இதையும் படிங்க: ஏப்ரல் 17 ஆம் தேதி சன் ரைசர்ஸ் அணி மும்பை வான்கடே மைதானத்தில் அந்த சாதனையை நிகழ்த்தும் – டேல் ஸ்டெயின் கணிப்பு
“அதே சமயம் சீனியர் ஜூனியர் என்ற சிறிய கோடு எங்களுக்கு இடையே இருப்பதாக கருதுகிறேன் ஆனால் இப்போதும் நாங்கள் நண்பர்களாக இருக்கிறோம். தற்போது கேப்டனாக இல்லாததால் நாங்கள் டாஸ் வீசுவதற்கு முன் அதிக நேரம் ஒன்றாக பேச முடிகிறது” என்று கூறினார்.



