நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி இந்தியாவின் மிகச்சிறந்த கேப்டனாக போற்றப்படுகிறார். இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களின் இலக்கணத்தை மாற்றும் அளவுக்கு பேட்டிங்கில் அபாரமாக செயல்பட்ட அவர் கேப்டனாக 2007 டி20 உலகக் கோப்பையை வென்றார். அத்துடன் 2011 உலகக் கோப்பையை 28 வருடங்கள் கழித்து அவருடைய தலைமையில் வென்ற இந்தியா 2013 சாம்பியன்ஸ் டிராபியையும் முத்தமிட்டது.
அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த தோனி சிறந்த ஃபினிஷராகவும் போற்றப்படுகிறார். ஆனால் அப்படிப்பட்ட அவருடைய சர்வதேச கேரியர் முடிந்த விதம் ரசிகர்களுக்கு சோகமான நாளாக அமைந்தது. ஏனெனில் 2019 உலகக் கோப்பை செமி ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 240 ரன்களை துரத்தியது.
உடைந்த தோனி:
அப்போட்டியில் ஆரம்பத்திலேயே விராட் கோலி, ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக், ஹர்டிக் பாண்டியா, ரிஷப் பண்ட் உள்ளிட்ட முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் தோல்வியின் பிடியில் வலுவாக சிக்கிய இந்தியாவுக்கு ஜடேஜாவுடன் சேர்ந்து தோனி நங்கூரமாக பேட்டிங் செய்தார். அதில் அதிரடியாக விளையாடி ஜடேஜா 77 (59) ரன்கள் விளாசி முக்கிய நேரத்தில் அவுட்டானார்.
இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து போராடிய தோனி 12 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட போது வெற்றி பெற வைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அப்போது 49வது ஓவரில் சிக்ஸர் அடித்த தோனி 2வது பந்தில் மார்ட்டின் கப்தில் ரன் அவுட்டாக்கினார். அந்த ரன் அவுட் இந்தியாவின் தோல்வி உறுதியாக்கியதால் கோடிக்கணக்கான இந்திய ரசிகர்களின் நெஞ்சங்களை உடைத்தது.
அந்த போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் தோனி ஓய்வு பெற்றது இந்திய ரசிகர்களுக்கு மேலும் வேதனையை கொடுத்தது. இந்நிலையில் 2019 உலகக்கோப்பை தோல்வி தம்முடைய நெஞ்சத்தை உடைத்த தருணம் என்று தோனி கூறியுள்ளார். இது பற்றி சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “அது மிகவும் கடினமானது. ஏனெனில் அதுவே என்னுடைய கடைசி உலகக் கோப்பை என்பது எனக்குத் தெரியும்”
இதையும் படிங்க: தொடர் துவங்கும் முன்பே ரெடியா இருக்க சொன்னாரு.. 19வது ஓவரை வீச அவர் தான் காரணம்.. ரிங்கு பகிர்ந்த பின்னணி
“அதில் வெற்றி பெறுவது நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது நெஞ்சம் உடைந்த தருணம். எனவே தோல்வியை ஒப்புக்கொண்டு நாங்கள் முன்னோக்கி நகர முயற்சித்தோம். அதிலிருந்து மீள்வதற்கு நிறைய நேரம் தேவைப்பட்டது. அதன் பின் நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதால் எனக்கு நிறைய நேரம் கிடைத்தது. ஆம் அது என்னுடைய மனமுடைந்த தருணம். ஆனால் நீங்கள் அதிலிருந்து நகர வேண்டும். நீங்கள் சிறந்ததை முயற்சித்தீர்கள். ஆனால் வெற்றி பெற முடியவில்லை. அதை ஒப்புக்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.



