
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடர் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தாவில் துவங்குகிறது. அந்தத் தொடரில் கோப்பையை வெல்லும் முனைப்புடன் அனைத்து 10 அணிகளும் தயாராகி வருகின்றன. அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் முதல் முறையாக பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்று 6வது கோப்பையை வெல்லும் கனவுடன் தயாராகி வருகிறது.
அந்த அணிக்காக 5 கோப்பைகளை வென்று கொடுத்து வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ள தோனி 43 வயதை தொட்டுள்ளார். அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு சிஎஸ்கே கேப்டன்சி பொறுப்பை ருதுராஜ் கையில் ஒப்படைத்துள்ள அவர் சாதாரண கீப்பராக மட்டுமே விளையாடி வருகிறார். கடந்த சில வருடங்களாக முழங்கால் வலியால் அவதிப்பட்ட தோனி பேட்டிங்கில் கடைசிக்கட்ட ஓவர்களில் மட்டுமே விளையாடினார்.
ஆனால் அந்த வாய்ப்பிலும் அதிரடியாக பேட்டிங் செய்த அவர் வயதானாலும் ஸ்டைல் மாறாது என்பதை நிரூபிக்கும் வகையில் சிக்ஸர்களை பறக்க விட்டு ரசிகர்களை மகிழ்வித்தார். அந்த வரிசையில் இம்முறை சிஎஸ்கே அணிக்காக மீண்டும் விளையாடுவதற்காக தோனி சேப்பாக்கத்தில் கடினமான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக நேற்று இலங்கை வீரர் மதீஸா பதிரனாவை அவர் பயிற்சியில் எதிர்கொண்டார்.
அப்போது பதிரனா வீசிய ஒரு யார்கர் பந்தை தோனி தமக்கே உரித்தான ஹெலிகாப்டர் ஷாட்டின் வாயிலாக மைதானத்துக்கு நேராக பவுண்டரியை பறக்க விட்டார். அதைப் பார்த்த பதிரனா சிரித்துக் கொண்டே மீண்டும் பந்து வீசுவதற்காக சென்றார். அந்த தருணத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.
இதற்கு முன் மும்பை அணிக்காக விளையாடிய இலங்கை ஜாம்பவான் வீரர் லசித் மலிங்காவுக்கு எதிராக தோனி ஓரிரு முறை ஹெலிகாப்டர் சிக்ஸர்களை அடித்துள்ளார். அதே போல தற்போது குட்டி மலிங்கா என்று சிஎஸ்கே ரசிகர்கள் வர்ணிக்கும் பதிரனாவுக்கு எதிராக ஹெலிகாப்டர் பவுண்டரியை தோனி பறக்க விட்டுள்ளார். அது சிஎஸ்கே ரசிகர்களிடம் மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: இன்று துவங்கிய சி.எஸ்.கே – மும்பை போட்டிக்கான டிக்கெட் விற்பனை.. விலை எவ்வளவு தெரியுமா? – எங்கு, எப்படி வாங்கலாம்?
அதே போல முதன்மைப் போட்டிகளிலும் சேப்பாக்கத்தில் அவர் ஹெலிகாப்டர் சிக்சர்களை பறக்க விடுவார் என்று சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் காத்திருக்கின்றனர். இதைத் தொடர்ந்து சென்னை தங்களுடைய முதல் போட்டியில் பரம எதிரி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்பார்க்கிறது. அந்தப் போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.