தோனி மட்டும் அதை செஞ்சு கொடுக்கலன்னா விராட் கோலி டெஸ்ட் கேப்டனா சாதிச்சுருக்க முடியாது – இஷாந்த் சர்மா பேட்டி

Ishant Sharma
- Advertisement -

சர்வதேச அரங்கில் 3 விதமான வெள்ளைப்பந்து உலக கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக சரித்திரம் படைத்த எம்எஸ் தோனி தலைமையில் 2010ஆம் ஆண்டு இந்தியா டெஸ்ட் கிரிக்கெட்டிலும் நம்பர் ஒன் கிரிக்கெட் அணியாக முன்னேறி சாதனை படைத்தது. இருப்பினும் 2011க்குப்பின் சச்சின், டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற சீனியர்கள் ஓய்வு பெற்றதால் அடுத்த தலைமுறையை நோக்கி நகர்ந்த இந்தியா தோனி தலைமையில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் தலா 4 – 0 என்ற கணக்கில் டெஸ்ட் கிரிக்கெட்டில் படுதோல்வியை சந்தித்தது.

அதனால் கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் 2014 அடிலெய்ட் டெஸ்டில் காயமடைந்த தமக்கு பதிலாக கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி 2 இன்னிங்சிலும் சதமடித்து ஆக்ரோஷமாக கேப்டன்ஷிப் செய்து வெற்றியின் விளிம்பு வரை அழைத்து வந்ததை கவனித்த தோனி நமக்கு அடுத்தபடியாக இவர் தான் இந்தியாவை வழிநடத்த தகுதியானவர் என்பதை உணர்ந்து அடுத்த போட்டியிலேயே அதிரடியாக ஓய்வு பெற்றார். அதன் காரணமாக புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி ஆக்ரோஷமாக கேப்டன்ஷிப் செய்து குறுகிய காலத்திலேயே இந்தியாவை வெற்றிகரமான டெஸ்ட் அணியாக மாற்றினார்.

- Advertisement -

தோனி உருவாக்கிய அணி:
குறிப்பாக 2014இல் தரவரிசையில் 7வது இடத்தில் திண்டாடிய இந்தியாவை 2016 – 2021 வரை தொடர்ந்து நம்பர் ஒன் அணியாக ஜொலிக்க வைத்த அவர் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய கேப்டனாக சரித்திரம் படைத்து வெற்றிகரமான ஆசிய கேப்டன் என்ற சாதனையுடன் கடந்த வருடம் விடை பெற்றார். இந்நிலையில் திறமையான பவுலர்களை தோனி வளர்த்து கொடுத்த உதவியாலேயே விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் வெற்றிகரமான கேப்டனாக செயல்பட முடிந்ததாக அந்த இருவரது தலைமையிலும் விளையாடிய இஷாந்த் சர்மா கூறியுள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “தோனி சிறந்தவர். விராட் கோலி கேப்டனாக வந்த போது பவுலிங் முழுமையாக இருந்தது. ஏனெனில் நாங்கள் தோனி பாய் தலைமையில் புதிய தலைமுறையை நோக்கி நகர்ந்த அணியில் வளர்ந்தோம். அப்போது ஷமி, உமேஷ் புதியவர்களாக இருந்தனர். நான் மட்டுமே பழைய வீரராக இருந்த நிலையில் புவனேஸ்வரும் புதியவராக வந்தார். அவர்களிடம் சிறந்த தகவல் தொடர்பை ஏற்படுத்திய மஹி பாய் போல யாரும் இருக்க முடியாது. மேலும் அவர் பவுலர்களை உருவாக்கி விராட் கோலியிடம் கொடுத்து விட்டு சென்றார்”

- Advertisement -

“அதன் பின் ஷமி, உமேஷ் வித்தியாசமான பவுலர்களாக உருவான நிலையில் பும்ராவும் வந்தார். அதே சமயம் விராட் கோலியும் மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டார். குறிப்பாக புதிய பந்தில் நீங்கள் 5 ஓவரில் 25 ரன்கள் கொடுத்தாலும் பரவாயில்லை 2 விக்கெட்டுகளை எடுத்தால் அவர் பாராட்டுவார். மேலும் நீங்கள் அதிக போட்டிகளில் விளையாடி விட்டதால் இனிமேல் அணியை முன்னோக்கி நடத்த வேண்டும் என்று என்னிடம் சொன்னது போல ஒவ்வொருவரிடமும் அவர் தனித்தனியே வேலையை கொடுப்பார்”

இதையும் படிங்க: நம்ம டீமுக்கு அவர் வந்துட்டாரு இல்ல. இனி பாருங்க ஆட்டத்தை. உலககோப்பையை குறி வைத்து – டிராவிட் அளித்த பேட்டி

“அத்துடன் ஷமியிடம் சென்று நீங்கள் விக்கெட் எடுப்பீர்கள் என்று தெரியும் ஆனால் தொடர்ந்து 3 ஓவர்களை மெய்டனாக வீச வேண்டும் என்று சொல்வார். அதே போல பும்ராவிடம் நீங்கள் அறிமுகமானது சரி ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து அசத்த வேண்டுமென்று சொல்வார். 2021க்குப்பின் எங்கள் அனைவரையும் வித்தியாசமாக யோசிக்குமாறு அவர் சொன்னதாலேயே வெற்றிகரமாக செயல்பட்டார்” என்று கூறினார்.

Advertisement