குட்டி மும்பை பெண் ரசிகைக்காக தல தோனி கொடுத்த பரிசு.. பாராட்டிய ஜாம்பவான் சச்சின்.. வான்கடேவில் நெகிழ்ச்சி

Dhoni and Sachin
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற 29வது லீக் போட்டியில் மும்பையை 20 ரன்கள் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் சென்னை தோற்கடித்தது. மும்பையில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை கேப்டன் ருதுராஜ் 69, சிவம் துபே 66*, தோனி 20 ரன்கள் அடித்த உதவியுடன் 207 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய மும்பைக்கு முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா கடைசி வரை அவுட்டாகாமல் அதிரடியாக விளையாடி சதமடித்து 105* (63) ரன்கள் குவித்து போராடினார். ஆனால் எதிர்ப்புறம் கேப்டன் பாண்டியா, சூரியகுமார் யாதவ் உள்ளிட்ட முக்கிய வீரர்களை அவுட்டாக்கி 20 ஓவரில் மும்பையை 184/6 ரன்களுக்கு கட்டுப்படுத்திய சென்னை தங்களுடைய 4வது வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

தோனியின் மனசு:
இந்த வெற்றிக்கு 4 ஓவரில் 28 ரன்கள் மட்டும் கொடுத்து நான்கு விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய பதிரனா ஆட்டநாயகன் விருதை வென்றார். முன்னதாக இந்த போட்டியில் டேரில் மிட்சேல் அவுட்டானதும் களமிறங்கிய சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் கடைசி 4 பந்துகளை மட்டும் எதிர்கொள்ளும் வாய்ப்பை பெற்றார்.

அதில் சுமாராக பந்து வீசிய மும்பையின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக 6, 6, 6 என ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்க விட்ட அவர் 20* (4) ரன்களை 500.00 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்து மாஸ் ஃபினிஷிங் கொடுத்தார். குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் சிக்சருடன் ஃபினிஷிங் செய்து இந்தியா 28 வருடம் கழித்து கோப்பையை வெல்ல உதவிய அதே மைதானத்தில் தோனி சிக்ஸர்களை பறக்க விட்டது மும்பை ரசிகர்களையே கொண்டாட வைத்தது.

- Advertisement -

அப்படி அதிரடியாக விளையாடி முடித்ததும் நேரடியாக பெவிலியன் நோக்கி வேகமாக சென்ற தோனி மாடி படிக்கட்டில் பந்து ஒன்று கிடப்பதை பார்த்தார். அதை கையில் எடுத்த தோனி அப்படியே அருகில் நீல நிற ஜெர்ஸியை அணிந்து நின்று கொண்டிருந்த ஒரு குட்டி மும்பை பெண் ரசிகரிடம் அந்த பந்தை கொடுத்து விட்டு சென்றது அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தது.

இதையும் படிங்க: வான்கடேவில் ரோஹித்தை வெச்சு தான் பிளானே போட்டோம்.. பதிரனா யார்கர் வேற லெவல்.. தாக்கூர் பேட்டி

அத்துடன் போட்டி முடிந்ததும் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது முன்னாள் இந்திய கேப்டன் தோனியிடம் கை கொடுத்து சிரித்த முகத்துடன் வெற்றிக்காக பாராட்டினார். மேலும் போட்டி முடிந்ததும் தோனியுடன் தோள் மீது கை போட்டு ஜஸ்பிரித் பும்ரா சிரித்த முகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இப்போட்டியில் அடித்த 20 ரன்களையும் சேர்த்து சிஎஸ்கே அணிக்காக 5000 ரன்கள் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையும் தோனி படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement