6, 6, 6.. மும்பையில் மிரட்டிய ருதுராஜ், துபே.. மாஸ் ஃபினிஷிங் செய்த தல தோனி.. சிஎஸ்கே அணிக்காக அபார சாதனை

CSk vs MI
- Advertisement -

ஐபிஎல் 2024 டி20 தொடரில் ஏப்ரல் 14ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் 29வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் தலா 5 கோப்பைகளை வென்று வரலாற்றின் வெற்றிகரமான அணிகளாக திகழும் மும்பை இந்தியன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதியது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

அப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து பேட்டிங்கை துவங்கிய சென்னைக்கு சொந்த ஊரில் மும்பையை அடித்து நொறுக்கும் நோக்கத்துடன் ஓப்பனிங்கில் களமிறக்கப்பட்ட அஜிங்க்ய ரஹானே 5 (8) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் அடுத்ததாக வந்த கேப்டன் ருதுராஜ் அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டார்.

- Advertisement -

தோனி ஃபினிஷிங்:
அவருடன் சேர்ந்து எதிர்புறம் சற்று தடுமாற்றமாக விளையாடிய மற்றொரு துவக்க வீரர் ரச்சின் ரவீந்தரா 2வது விக்கெட்டுக்கு 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 21 (16) ரன்களில் அவுட்டானார். அப்போது வந்த சிவம் துபே தம்முடைய ஸ்டைலில் மும்பையை அதிரடியாக எதிர்கொண்டார். அவருடன் ஜோடி சேர்ந்து மறுபுறம் விளையாடிய கேப்டன் ருதுராஜ் சிறப்பாக விளையாடி அரை சதமடித்து அசத்தினார்.

அந்த வகையில் தொடர்ந்து 16 ஓவர்கள் வரை அசத்தலாக பேட்டிங் செய்த அவர் 3வது விக்கெட்டுக்கு 90 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து 5 பவுண்டரி 5 சிக்ஸருடன் 69 (40) ரன்கள் விளாசி அவுட்டானார். மறுபுறம் தொடர்ந்து அசத்திய சிவம் துபே அரை சதமடித்து ரன் குவிப்பில் ஈடுப்பட்டார். இருப்பினும் எதிர்புறம் வந்து தடுமாற்றமாக செயல்பட்ட டேரில் மிட்சேல் 17 (14) ரன்களில் அவுட்டாகி சென்றார்.

- Advertisement -

அப்போது ரசிகர்களின் மிகப்பெரிய ஆரவாரத்திற்கு மத்தியில் களமிறங்கிய ஜாம்பவான் எம்எஸ் தோனி கடைசி 4 பந்துகளில் பாண்டியாவுக்கு எதிராக 6, 6, 6, 2 என 3 சிக்சர்களைப் பறக்கவிட்டு 20* (4) ரன்கள் குவித்து 2011 உலகக் கோப்பை ஃபைனல் போல சூப்பர் ஃபினிஷிங் கொடுத்தார். மறுபுறம் கடைசி வரை அவுட்டாகாமல் அசத்திய சிவம் துபே 10 பவுண்டர் 2 சிக்சருடன் 66* (38) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் சென்னை 206/4 ரன்கள் குவித்தது.

இதையும் படிங்க: லைட் போட்டதும் மொத்தமா மாறிடுச்சு.. கம்பீர் இருப்பது கிரேட்.. லக்னோவை வீழ்த்திய ஆட்டநாயகன் சால்ட் பேட்டி

மறுபுறம் மும்பை சார்பில் அதிகபட்சமாக கேப்டன் ஹர்திக் பாண்டியா 2 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக இப்போட்டியில் சிஎஸ்கே அணிக்காக 250வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் என்ற மாபெரும் சாதனையை தோனி படைத்தார். அந்த மைல்கல் போட்டியில் அடித்த இந்த 20 ரன்களையும் சேர்த்து ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக சுரேஷ் ரெய்னாவுக்கு பின் 5000 ரன்கள் அடித்த 2வது வீரர் என்ற சாதனையும் தோனி படைத்துள்ளார்.

Advertisement