- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஐபிஎல் 2025 தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவீர்களா? ரசிகரின் கேள்விக்கு தோனி கொடுத்த பதில்

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடரில் முன்னாள் நட்சத்திர இந்திய ஜாம்பவான் கேப்டன் எம்எஸ் தோனி விளையாடுவாரா என்ற கேள்வியும் குழப்பமும் ரசிகர்களிடம் காணப்படுகிறது. 2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் அவர் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான கேப்டனாக சாதனை படைத்துள்ளார். அத்துடன் அவருடைய தலைமையில் 2 சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பைகளையும் சென்னை வென்றுள்ளது.

அந்த சூழ்நிலையில் 42 வயதை கடந்து விட்ட அவர் சமீப காலங்களாகவே முழங்கால் வலியால் முழுமையாக பேட்டிங் செய்வதில்லை. அதனால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த வருடம் சிஎஸ்கே கேப்டன்ஷிப் பொறுப்பை கையில் ஒப்படைத்த தோனி சாதாரண கீப்பராக மட்டுமே விளையாடினார். மறுபுறம் ருதுராஜ் தலைமையில் தடுமாற்றமாக விளையாடிய சென்னை லீக் சுற்றுடன் வெளியேறியது.

- Advertisement -

2025 சீசனில் தோனி:
அதனால் ஃபைனலுக்கு தகுதி பெற்று சென்னை மண்ணில் கோப்பையை வென்று தோனியை வெற்றிகரமாக வழியனுப்பும் வாய்ப்பை சிஎஸ்கே நழுவ விட்டது. இதற்கிடையே 2025 ஐபிஎல் சீசனில் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைக்க முடியும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் ருதுராஜ், ஜடேஜா, துபே, பதிரனா ஆகியோரை சிஎஸ்கே தக்க வைக்க முடிவெடுத்துள்ளது.

அதனால் 2025 சீசனில் தோனி விளையாடுவது மிகவும் கடினமாகியுள்ளது என்றே சொல்லலாம். இருப்பினும் 2025 மெகா ஏலத்தில் தக்க வைக்கும் வீரர்களை அதிகரிக்க வேண்டும் என்று அனைத்து ஐபிஎல் அணிகளும் பிசிசிஐ’யிடம் கோரிக்கை வைத்து வருகின்றன. இந்நிலையில் 2025 ஐபிஎல் சீசனில் எத்தனை வீரர்கள் தக்க வைக்கப்படுவார்கள் என்பதை பொறுத்தே தாம் விளையாடுவேன் என்று தோனி கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய தனியார் நிகழ்ச்சியில் ரசிகரின் கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு. “தக்க வைக்கப்படும் வீரர்களுக்கான புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட உள்ளது. அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அந்த விதிமுறைகள் தெரிந்த பின் நாங்கள் முடிவெடுப்போம். ஏனெனில் தற்போது பந்து எங்களுடைய கையில் இல்லை. எனவே விதிமுறைகள் இறுதிச் செய்யப்படும் போது நாங்கள் முடிவெடுப்போம்”

இதையும் படிங்க: இந்தியா – இலங்கை ஒருநாள் தொடர் நடைபெறும் கொழும்பு மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் ரிப்போர்ட்

“அந்த முடிவை நாங்கள் அணியின் நன்மைக்காக எடுப்போம். ஏனெனில் நாளின் இறுதியில் அணி சிறப்பாக விளையாட வேண்டும் என்பதே எங்கள் அனைவரின் விருப்பமாகும். அதனால் விதிமுறைகள், தக்க வைப்புகளின் அடிப்படையில் சிஎஸ்கே அணிக்கு எது சிறந்தது என்பதை பார்த்து அதற்கு தகுந்த நல்ல முடிவை எடுப்போம்” என்று கூறினார். இதிலிருந்து 2025 ஏலத்தில் 4க்கு பதில் 5 – 7 வீரர்களை தக்க வைக்க பிசிசிஐ அனுமதியளித்தால் தாம் விளையாடுவேன் என்று தோனி மறைமுகமாக கூறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -