இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டரான ஷிவம் துபே நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் பேட்டிங் மட்டுமின்றி பந்து வீச்சிலும் இந்திய அணிக்கு மிக முக்கியமான பங்களிப்பை வழங்கி வருகிறார். குறிப்பாக பேட்டிங்கில் பின்வரிசையில் களமிறங்கி அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தும் அவர் பந்துவீச்சிலும் தேவைப்படும் நேரங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். முன்பெல்லாம் மிதவேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக பார்க்கப்பட்ட ஷிவம் துபே தற்போது 130 கிலோமீட்டர் வரை வேகமாக வீசும் ஒரு வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக உருவெடுத்து இருக்கிறார்.
ஷிவம் துபேவின் பந்துவீச்சு குறித்து பேசிய : மோர்னே மோர்கல்
அதிலும் குறிப்பாக போட்டியின் ஆரம்பத்தில் பவர்பிளே ஓவர்களிலேயே பந்துவீசும் அளவிற்கு தனது பந்துவீச்சு திறனை மேம்படுத்தியுள்ளார். இதன் காரணமாக ஹார்டிக் பாண்டியாவிற்கு இணையான இன்னொரு வீரராக அவர் பார்க்கப்பட்டு வருகிறார். இப்படி பந்துவீச்சில் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்ட மோர்னே மோர்கலை பலரும் பாராட்டி வரும் வேளையில் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளரான மோர்னே மோர்கலும் அவர் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : ஷிவம் துபேவை ஒரு முழுநேர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக மாற்றுவதற்கான பயணம் கடந்த ஓராண்டுக்கு முன்னதாகவே துவங்கியது. அதன் காரணமாகத்தான் அவருக்கு நாங்கள் ஆசிய கோப்பை தொடரின் போது பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதல் ஓவரை வீசும் வாய்ப்பையும் கொடுத்தோம். பயிற்சியாளர் மற்றும் நிர்வாகம் என அனைவரும் உங்களை நம்புகிறார்கள் என்று தெரிந்தால் உங்களை நிரூபிக்க வேண்டிய அழுத்தம் தேவை கிடையாது.
ஷிவம் துபேவை பொறுத்தவரை அவருடைய பந்துவீச்சில் நிறைய வேரியேஷன்களும், திறமையும் இருக்கின்றன. அவருக்கு தேவையெல்லாம் நம்பிக்கையான சூழலை உருவாக்கிக் கொடுப்பது மட்டும்தான். அந்த வகையில் நாங்கள் ஒரு நல்ல சூழலை அவருக்கு உருவாக்கி கொடுத்திருக்கிறோம். எந்த பகுதியில் பந்து வீசினால் பேட்ஸ்மேன்கள் அடிப்பது கடினம் என்று தெரிந்து பந்து வீசுகிறார்.
இதையும் படிங்க : 2026 டி20 உலககோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் விளையாடப்போகும் 2 அணிகள் எது? – மோர்கன் கணிப்பு
ஒரு போட்டியில் அவருக்கு பந்துவீச வாய்ப்பு கொடுக்கவில்லை என்றால் அவர் வருத்தத்துடன் வெளியேறுகிறார். அதை பார்க்கும் போது அவருடைய பந்துவீசும் ஆர்வம் எங்களுக்கு தெரிகிறது. அவருடைய பந்துவீச வேண்டும் என்ற ஆர்வம் தான் அவரை இன்று நல்ல ஆல்ரவுண்டராக மாற்றியுள்ளது. இதற்காக அவர் கடந்த ஒரு ஆண்டாகவே கடினமாக உழைத்துள்ளார் என்றும் மோர்னே மோர்கல் கூறியது குறிப்பிடத்தக்கது.



