
மான்செஸ்டரில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா கிட்டத்தட்ட நழுவ விட்டுள்ளது. ஜூலை 23ஆம் தேதி துவங்கிய அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா போராடி 358 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சாய் சுதர்சன் 61, ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பண்ட் காயத்துடன் விளையாடி 54 ரன்கள் எடுத்தார்கள். இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
அடுத்ததாக விளையாடும் இங்கிலாந்து 3வது நாள் முடிவில் 544/7 ரன்கள் குவித்து இந்தியாவை விட 186 ரன்களை முன்னிலையாகப் பெற்றுள்ளது. அதனால் இப்போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் தோல்வியை சந்திக்கும் அபாயத்தில் சிக்கியுள்ளதாக ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இத்தனைக்கும் இப்போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா விளையாடியும் இந்திய அணியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியவில்லை.
அதனால் 2015 ஆஸ்திரேலியா சிட்னி போட்டிக்குப் பின் ஒரு சேனா டெஸ்ட் போட்டியில் இந்தியா 500 ரன்களை வழங்கி மோசமான சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் 3வது நாளில் 2வது புதிய பந்தை எடுத்த போது பும்ரா, சிராஜ் ஆகியோர் லேசான காயத்தைச் சந்தித்தது பின்னடைவைக் கொடுத்ததாக பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கெல் தெரிவித்துள்ளார். மேலும் மான்செஸ்டர் பிட்ச் ஃபிளாட்டாக இருப்பதும் இந்தியா 500 ரன்களை வழங்க முக்கிய காரணமானதாக அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஆம் துரதிஷ்டவசமாக நாங்கள் 2வது புதிய பந்தை எடுத்த போது பும்ரா கணுக்காலில் லேசான வலியைச் சந்தித்தார். சிராஜும் தனது கால் விரலில் வலியை சந்தித்தார் என்று நினைக்கிறேன். அவர்கள் தற்போது நன்றாக இருப்பதாகத் தெரிகிறது. பிட்ச் ஃபிளாட்டாக இருக்கும் போது பந்துக்கு பின்னே நீங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா எனர்ஜியை போட வேண்டும் என்று நினைக்கிறேன்”
“பிட்ச்சில் எக்ஸ்ட்ரா உதவி இல்லாத போது எல்பிடபுள்யூ, கேட்ச் முறையில் விக்கெட்டுகளை எடுக்க அது தேவைப்படுகிறது. சிராஜ் போன்றவர் அதிக பணிச்சுமையுடன் பவுலிங் செய்கிறார். கம்போஜ் அறிமுகப் போட்டியில் விளையாடுகிறார். எனவே ஒரு நல்ல வேகப்பந்து வீச்சு துறையை நாங்கள் உருவாக்குவது முக்கியம். இவற்றைத் தாண்டி வெளிப்புறக்களம் மிகவும் வேகமாக இருப்பது எங்களுக்கு பின்னடைவைக் கொடுக்கிறது”
இதையும் படிங்க: 500 ரன்ஸ்.. 2015க்குப்பின் இந்தியா மோசமான சாதனை.. கம்பீரை ராஜினாமா செய்யுமாறு ரசிகர்கள் விளாசல்
“அதே சமயம் ஈடுபாடு மற்றும் முயற்சி ஆகியவற்றைப் பொறுத்த வரை எங்களுடைய வீரர்களைக் குறை சொல்ல முடியாது. ஆனாலும் பவுலிங் செய்வதற்கு எந்த உதவியும் கிடைக்காத இது போன்ற பிட்ச்சில் பந்துகளுக்கு பின்னால் நீங்கள் கொஞ்சம் எக்ஸ்ட்ரா எனர்ஜியை கொடுக்க வேண்டும்” என்று கூறினார். இதை அடுத்து இங்கிலாந்தை 600 ரன்களுக்குள் அவுட்டாக்க இந்திய கிரிக்கெட் அணி போராட உள்ளது.