- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்தியா விதிமுறையை மீறல.. ராணா சாப்பிட்டுக்கிட்டு இருந்தாரு.. சந்தேகம்னா அம்பயரிடம் கேளுங்க.. மோர்கெல் பதிலடி

இங்கிலாந்துக்கு எதிராக புனே நகரில் நேற்று நடைபெற்ற நான்காவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 182 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதைத் துரத்திய இங்கிலாந்து 19.4 ஓவரில் 166 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது.

முன்னதாக அந்தப் போட்டியில் காயத்திலிருந்து குணமடைந்து விளையாடிய சிவம் துபே கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் தலையில் அடி வாங்கினார். அப்போது அவரை சோதித்த இந்திய அணியின் மருத்துவர் எந்த பிரச்சனையும் இல்லை என்று உறுதி செய்தார். அதைத் தொடர்ந்து விளையாடிய துபே கடைசி பந்தில் ரன் அவுட்டானார். அடுத்ததாக இங்கிலாந்து பேட்டிங் செய்த போது சப்ஸ்டிடியூட் விதிமுறையை பயன்படுத்திய இந்தியா துபேவுக்கு பதிலாக ஹர்ஷித் ராணாவை அறிமுகமாக களமிறக்கியது.

- Advertisement -

இங்கிலாந்தின் விமர்சனம்:

அந்த வாய்ப்பை கச்சிதமாக பயன்படுத்திய ராணா முக்கியமான 3 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் பங்காற்றினார். ஆனால் ஆல் ரவுண்டரான துபேவுக்கு பதில் முழுமையான பவுலரான ஹர்ஷித் ராணாவை இந்தியா ஐசிசி விதிமுறையை மீறி விளையாட வைத்துள்ளதாக அலெஸ்டர் குக், மைக்கேல் வாகன், கெவின் பீட்டர்சன் போன்ற முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள் விமர்சித்து வருகிறார்கள்.

சொல்லப்போனால் இந்த முடிவை நாங்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்ன இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் போட்டியின் முடிவில் அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்நிலையில் ஐசிசி விதிமுறைக்கு உட்பட்டு தான் தாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். இதில் மேற்கொண்டு விவாதங்கள் இருந்தால் அதைப் போட்டி நடுவரிடம் கேட்குமாறு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

மோர்கெல் பதிலடி:

இது பற்றி மோர்கெல் பேசியது பின்வருமாறு. “பாதி போட்டியின் முடிவில் எங்களிடம் வந்த சிவம் துபே லேசான தலைவலி இருப்பது போல் உணர்வதாக தெரிவித்தார். எனவே அவருடைய பெயரை நாங்கள் போட்டி நடுவரிடம் எடுத்துச் சென்றோம். அங்கிருந்து எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் போட்டி நடுவரைப் பொறுத்தது”

இதையும் படிங்க: 2 ஓவருக்கு அப்றம் தான் அவர் இதை சொன்னாரு.. முதல் இந்திய வீரராக தனித்துவ சாதனை படைத்த ராணா பேட்டி

“அந்த முடிவு எடுத்த போது ராணா இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அவரைப் பார்த்த நாங்கள் விரைவாக தயாராகி பவுலிங் செய்ய வருமாறு சொன்னோம். எனவே அந்த முடிவு எனக்கு மேலே அதிகாரம் கொண்ட போட்டி நடுவரிடம் சென்றது. நாங்கள் அவரிடம் மாற்று வீரரின் பெயரை மட்டுமே எடுத்துச் செல்ல முடியும். அங்கிருந்து எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் எங்களுடைய கைகளுக்கு அப்பாற்பட்டது” என்று கூறினார்.

- Advertisement -