இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக கௌதம் கம்பீர் செயல்படத் துவங்கியுள்ளார். ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பை வெற்றியுடன் ராகுல் டிராவிட் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து விடை பெற்றார். எனவே அவருக்கு அடுத்தபடியாக 2007 மற்றும் 2011 உலகக் கோப்பைகளையும் 3 ஐபிஎல் கோப்பைகளை கேப்டனாகவும் ஆலோசகராகவும் வென்ற அனுபவம் கொண்ட கம்பீர் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய தலைமையில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரின் முதல் 2 போட்டிகளில் இந்தியா வென்றது. அந்த வகையில் முதல் தொடரிலேயே வெற்றி கண்ட கௌதம் கம்பீர் பயிற்சியாளராக இந்திய அணியில் தமது பயணத்தை வெற்றிகரமாக துவங்கியுள்ளார். முன்னதாக தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதால் தமக்குத் தேவையான துணை பயிற்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ள பிசிசிஐ கௌதம் கம்பீருக்கு அதிகாரம் வழங்கியது.
இணையும் மோர்கெல்:
அதைப் பயன்படுத்திய கௌதம் கம்பீர் துணைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் அபிஷேக் நாயரை தேர்ந்தெடுத்துள்ளார். மும்பையைச் சேர்ந்த அவர் ரோகித் சர்மாவின் நண்பராக இருப்பதுடன் கொல்கத்தா ஐபிஎல் அணியில் பல வருடங்கள் கௌதம் கம்பீருடன் இணைந்து வேலை செய்தார். அதே போல நெதர்லாந்து வீரர் ரியான் டஸ்சேட் ஐபிஎல் அணியில் விளையாடி துணைப் பயிற்சியாளராக வேலை செய்துள்ளார்.
எனவே அவரையும் கௌதம் கம்பீர் தம்முடைய துணைப் பயிற்சியாளராக தேர்ந்தெடுத்துள்ளார். அதே போல தென்னாபிரிக்க முன்னாள் வீரர் மோர்னே மோர்கெலை அவர் பவுலிங் பயிற்சியாளராக தேர்ந்தெடுத்திருந்தார். குறிப்பாக 2022 – 2023 சீசன்களில் லக்னோ அணியில் கம்பீர் ஆலோசகராக இருந்த போது மோர்கெல் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்டார்.
அதன் காரணமாக இந்திய அணியில் கம்பீர் அவரை பவுலிங் பயிற்சியாளராக தேர்வு செய்திருந்தார். இருப்பினும் சொந்த காரணங்களுக்காக தற்போது துவங்கியுள்ள இலங்கை தொடரில் மோர்னே மோர்கல் இந்திய அணியுடன் இணையவில்லை. இந்நிலையில் ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்துக்கு எதிராக தங்களது சொந்த மண்ணில் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட உள்ளது.
இதையும் படிங்க: நாங்க அங்க போக மாட்டோம்.. ஆனா நீங்க இங்க வரவேண்டியதா இருக்கும் – பாகிஸ்தானை மடக்கிய பி.சி.சி.ஐ
அந்தத் தொடரில் மோர்னே மோர்கெல் இந்திய அணியின் பவுலிங் பயிற்சியாளராக இணைய உள்ளதாக க்ரிக்பஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. 2006 – 2018 வரை தென்னாபிரிக்காவுக்காக விளையாடி 481 விக்கெட்டுகள் எடுத்துள்ள மோர்கெல் பாகிஸ்தான் அணியின் பவுலிங் பயிற்சியாளராக செயல்பட்ட அனுபவத்தை கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து தற்போது முதல் முறையாக அவர் கம்பீருடன் சேர்ந்து இந்திய அணியிலும் வேலை செய்யப்பட்டுள்ளார். அவர்களுடன் டி திலீப் இந்திய அணியின் ஃபீல்டிங் பயிற்சியாளராக தொடர்வது குறிப்பிடத்தக்கது.



