
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் போராடி சமன் செய்தது. அந்தத் தொடரில் ஜஸ்ப்ரித் பும்ரா 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார். ஆச்சரியப்படும் வகையில் அந்த 3 போட்டிகளிலும் இந்தியா வெல்லவில்லை. அவருக்கு பதிலாக 5 போட்டிகளிலும் விளையாடிய சிராஜ் அதிக விக்கெட்டுகள் (23) எடுத்த வீரராக சாதனை படைத்து வெற்றியில் பங்காற்றினார்.
இந்நிலையில் இத்தொடரை இந்தியா பும்ரா இல்லாமல் கேப்டன் சுப்மன் கில் சமன் செய்தது பெரிய சாதனை என்று முன்னாள் இங்கிலாந்து வீரர் மான்டி பனேசர் பாராட்டியுள்ளார். மேலும் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிராஜை சுற்றி பவுலிங் துறையை உருவாக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“சுப்மன் கில்லை பொறுத்த வரை பும்ரா இல்லாமல் இங்கிலாந்தில் டெஸ்ட் போட்டிகளை இந்தியா வென்றது பெரிய விஷயமாகும். அது மிகப்பெரிய பாராட்டு. உலகின் மிகச்சிறந்த பவுலரான அவர் இந்தியாவின் வெற்றிக்கு தேவைப்படவில்லை. அவர் இல்லாமலேயே இந்தியாவால் வெற்றி பெற முடிகிறது. அதுவே சுப்மன் கில் தன்னுடைய கேப்டன்ஷிப்பில் செய்த பெரிய சாதனை”
“பும்ரா வெளிநாட்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அது இந்தியாவுக்கு நல்லது. சொந்த மண்ணில் அவர் இல்லாமலேயே இந்தியா எதிரணிகளை தோற்கடிக்க வல்லது. ஆனால் வெளிநாட்டு போட்டிகளில் அவர் துருப்புச்சீட்டாக இருப்பார். எனவே சொந்த மண்ணில் நடைபெறும் போட்டிகளுக்கு நீங்கள் தேவையில்லை, ஆனால் வெளிநாட்டில் கண்டிப்பாக தேவை என்று அவரிடம் இந்திய அணி சொல்ல வேண்டும்”
“ஓவல் போட்டியில் பெற்ற வெற்றி தற்போது முகமது சிராஜ் வெற்றிக்கான சாவியாக இருப்பதைக் காட்டுகிறது. இந்திய அணி அவரைச் சுற்றி பவுலிங் அட்டாக்கை உருவாக்க வேண்டும். பும்ரா 5 போட்டிகளிலும் விளையாடுவதற்கு தேவையான உடல் தகுதியைக் கொண்டிருக்கவில்லை. தற்போது சிராஜால் போட்டிகளை வென்று கொடுக்க முடியும். பும்ராவிடம் துருப்புச்சீட்டு இருக்கிறது”
இதையும் படிங்க: சந்தேகமே வேணாம்.. சச்சினை முந்தி சச்சினால் முடியாத இந்த சாதனையை ஜோ ரூட் படைப்பாரு.. மான்டி பனேசர்
“ஆனால் முகமது சிராஜ் வெற்றிக்கான சாவியாக இருப்பார். வெளிநாட்டு தொடர்களில் கில் மற்றும் கௌதம் கம்பீரர் ஆகியோருக்கு முகமது சிராஜ் முக்கியமானவராக இருப்பார்” என்று கூறினார். அவர் கூறுவது போல பும்ரா இல்லாத போட்டிகளில் சிராஜ் மிகவும் பொறுப்புடன் குறைந்த சராசரியில் பவுலிங் செய்து அதிக விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு உதவுவது குறிப்பிடத்தக்கது.