
சுப்மன் கில் தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியனான தென்னாப்பிரிக்காவை எதிர்த்து சொந்த மண்ணில் பலம் வாய்ந்த இந்திய அணி விளையாடுவதால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த டெஸ்ட் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது இன்று நவம்பர் 14-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் துவங்கியது. அதன்படி இன்று நடைபெற்ற முதல்நாள் ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்து இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 159 ரன்களுக்கு சுருண்டது.
பின்னர் தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய இந்திய அணியானது முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 37 ரன்கள் குவித்துள்ளது. இதன் காரணமாக 122 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் நாளைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் இந்திய அணி விளையாட இருக்கிறது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக மிகச் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
அதேவேளையில் மற்றொரு நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜும் 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியிருந்தார். சுழற்பந்து வீச்சுக்கு இந்த ஆடுகளம் சாதகமாக இருக்கும் என்பதனால் வாஷிங்டன் சுந்தர், அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா என 4 ஸ்பின்னர்கள் இடம் பெற்றிருந்த வேளையில் வேகப்பந்து வீச்சாளர்கள் இருவருமே 7 விக்கெட்டை எடுத்து அசத்தினர்.
இந்நிலையில் இந்த கொல்கத்தா மைதானத்தில் முகமது சிராஜ் தான் பந்துவீசும் போது பும்ரா கொடுத்த அறிவுரை பற்றி சில கருத்துக்களை போட்டி முடிந்து பகிர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் புதுப்பந்தில் பந்துவீசும் போது பேட்ஸ்மன்களுக்கு எளிதாக சென்றது. ஆனால் பந்து பழையதாக மாறியதும் பவுன்ஸ் குறைந்தது. இதனால் ஸ்டம்ப் டு ஸ்டம்ப் பந்து வீசினால் சிறப்பாக இருக்கும் என்று நினைத்தேன். அந்த வகையில் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பந்து வீசினேன்.
இதையும் படிங்க : டெஸ்ட் வரலாற்றில் முதன் முறையாக அரங்கேறிய சம்பவம்.. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் – நடந்த வினோதம்
ஒரு கட்டத்தில் பும்ரா என்னிடம் வந்து இந்த மைதானத்தில் ஒரு எண்டில் பந்துகளை தொடர்ந்து ஸ்டம்பை நோக்கி வீசுமாறு கூறினார். அப்படி வீசும் போது எல்.பி.டபிள்யு, போல்டு ஆகியவை கிடைக்கும் என்றும் லைன் மற்றும் லென்த் மிகச் சரியாக இருந்தால் கேட்ச்சும் கிடைக்கும் என்று கூறினார். அந்த வகையிலே ஸ்டம்பை மட்டும் குறி வைத்து பந்து வீசியதாக முகமது சிராஜ் கூறியது குறிப்பிடத்தக்கது.