3 விக்கெட்ஸ்.. ராணா, கிருஷ்ணாவை விட பெஸ்ட் என்பதை காட்டிய சிராஜ்.. சக வீரரிடம் நெகிழ்ச்சி செயல்

Mohammed Siraj
- Advertisement -

இந்தியாவில் சயீத் முஸ்தாக் அலி 2025 டி20 கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் டிசம்பர் 12ஆம் தேதி புனேவில் நடைபெற்ற எலைட் குரூப் பி பிரிவின் லீக் போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியை சிறப்பாக பந்து வீசிய ஹைதராபாத் 18.5 ஓவரில் 131 ரன்களுக்கு சுருட்டி வீசியது. மும்பைக்கு அஜிங்க்ய ரஹானே 9, சர்பராஸ் கான் 5, ரகுவன்சி 5, அன்கோலேக்கர் 3 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் அவுட்டானார்கள். அதிகபட்சமாக ஜெய்ஸ்வால் 29 (20), ஹர்டிக் டாமோர் 29 (26), சுயன்ஸ் ஷேட்ஜ் 28 (22) ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

சிராஜ் அசத்தல்:

ஹைதராபாத் அணிக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 3, கேப்டன் மிலிந்த் 2, தனய் தியாகராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். குறிப்பாக நம்பிக்கை நட்சத்திரம் முகமது சிராஜ் 3.5 ஓவரில் வெறும் 17 ரன்கள் மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அதிலும் குறிப்பாக சர்தூள் தாகூர், டானுஷ் கோட்டியான் ஆகியோரை அவர் அடுத்தடுத்த பந்துகளில் அவுட்டாக்கி அசத்தினார்.

2021 காலகட்டங்களில் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 விதமான கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்காக சிராஜ் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக விளையாடி வெற்றிகளில் பங்காற்றினார். குறிப்பாக 2023 ஆசியக் கோப்பை இறுதிப்போட்டியில் இலங்கையை தெறிக்க விட்ட அவர் இந்தியா எளிதாக கோப்பையை வெல்ல உதவினார்.

- Advertisement -

நெகிழ்ச்சியான செயல்:

மேலும் 2023ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்த சிராஜ் உலகக் கோப்பையிலும் அசத்தினார். இருப்பினும் 2024இல் வந்த பயிற்சியாளர் கௌதம் கம்பீர் அவரையும் முகமது ஷமியையும் ஒருநாள், டி20 கிரிக்கெட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கழற்றி விட்டுள்ளார். அவர்களுக்கு பதிலாக வாய்ப்பு பெற்ற பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா ஆகியோர் இதுவரை சிறப்பாக விளையாடவில்லை என்பதை ரசிகர்கள் அறிவார்கள்.

இதையும் படிங்க: முதல் போட்டியில் கலக்கிய ஹார்டிக் பாண்டியா இரண்டாவது போட்டியில் தடுமாற என்ன காரணம்? – இர்பான் பதான்

அந்த சூழ்நிலையில் இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய சிராஜ் அவர்களை விட தம்முடைய தரம் குறைந்து போகவில்லை என்பதை நிரூபித்தார். அடுத்து விளையாடிய ஹைதராபாத் 11.5 ஓவரில் 132/1 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அதிகபட்சமாக அமன் ராவ் 52* (29), தன்மய் அகர்கர் 75 (40) ரன்கள் குவித்து எளிதாக வெற்றி பெற வைத்தார்கள். அந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய சிராஜ் ஆட்டநாயகன் விருது வென்றார். இருப்பினும் அவ்விருதை சிராஜ் அப்படியே சக வீரர் தன்மய் அகர்வாலுக்கு கொடுத்து அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்தார்.

Advertisement