- Advertisement -
ஐ.பி.எல்

ஆர்.சி.பி அணியின் உயிரே நீங்கள் தான்.. நீங்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கு நன்றி – முகமது சிராஜ் உருக்கம்

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது சிராஜ் கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்துள்ளார். சன் ரைசர்ஸ் அணிக்காக அறிமுகமாகி இருந்தாலும் அதன் பிறகு பெங்களூரு அணிக்கு வந்த அவர் விராட் கோலியின் வழிகாட்டுதலின் கீழ் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தியதாலேயே தற்போது இந்திய அணியில் இடம் பிடித்து முதன்மை வேகப்பந்து வீச்சாளராக திகழ்ந்து வருகிறார். அவரது இந்த வெற்றிக்கு ஆர்.சி.பி-யும் ஒரு காரணம் என்றால் மிகையல்ல.

ஆர்.சி.பி அணிக்கு கடமைப்பட்டுள்ளேன் :

அந்த அளவிற்கு கடந்த ஏழு ஆண்டுகளாக ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரராக விளையாடி வந்த அவர் இதுவரை அந்த அணிக்காக 87 போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்த ஆண்டு தற்போது நடைபெற்று முடிந்த மெகா ஏலத்துக்கு முன்னதாக பெங்களூரு அணியால் தக்கவைக்கப்படாத அவர் ஏலத்தின் போது நிச்சயம் ஆர்சிபி அணியால் வாங்கப்படுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

- Advertisement -

ஆனால் நடைபெற்று முடிந்த மெகா ஏலத்தில் 12 கோடியே 25 லட்சம் ரூபாய்க்கு குஜராத் அணி அவரை ஒப்பந்தம் செய்துள்ளது. ஆர்சிபி அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த அவரை அந்த அணி வாங்காதது ரசிகர்கள் மத்தியிலும் ஏமாற்றத்தை அளித்திருந்தது. இந்நிலையில் பெங்களூரு அணியில் இருந்து விலகிய பின்னர் தனக்கும் அந்த அணிக்கும் இடையேயான உறவு குறித்த ஒரு எமோஷனலான பதிவை முகமது சிராஜ் பகிர்ந்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது : “மை டியர் ஆர்.சி.பி”, ஆர்.சி.பி அணியின் ஜெர்சியை அணிந்திருந்த நாட்களை நான் மறக்கவே மாட்டேன். ஆர்.சி.பி அணியுடன் நான் இணைந்த போது இப்படி ஒரு பந்தம் உருவாகும் என்று நினைக்கவில்லை. பெங்களூரு அணிக்காக முதல் பந்து வீசியது முதல், முதல் விக்கெட் எடுத்தது முதல், ஒவ்வொரு போட்டியும் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது.

- Advertisement -

இந்த பயணத்தில் ஏராளமான ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் ரசிகர்கள் எனக்கு ஆதரவாக நின்றார்கள். ஆர்.சி.பி அணியின் உயிரே ரசிகர்கள் தான். எங்களது அணி எப்போது சரிவை சந்தித்தாலும், உச்சத்தை தொட்டு சாதித்தாலும் கைவிடாமல் எங்களை காப்பாற்றி ஆதரவு கொடுத்ததும் ரசிகர்கள் தான். ஆர்சிபி அணியின் உயிர் நாடியே நம்பிக்கையான உண்மையான ரசிகர்கள் தான். என்றென்றுமே அவர்களுக்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மா வந்தாலும் பிரச்சனை இல்ல.. கே.எல் ராகுலுக்கு அடித்த ஜாக்பாட் – விவரம் இதோ

இந்த அணியின் ரசிகர்கள் போல் வேறு எங்கும் இருக்க மாட்டார்கள் என்றும் நினைக்கிறேன். அந்த அளவிற்கு ஆர்சிபி அணியை ரசிகர்கள் நேசிக்கிறார்கள். இது நிச்சயம் நான் அந்த அணியில் இருந்து பிரிவதற்கான நேரம் என்று நினைக்கவில்லை. ஆனால் நான் இந்த அணியில் இருந்து வெளியேறுவதால் நன்றி சொல்லியே ஆக வேண்டும் என முகமது சிராஜ் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -