இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. அத்தொடரின் கடைசி போட்டி இங்கிலாந்தில் இருக்கும் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. அந்தப் போட்டியில் 374 ரன்களை வெற்றி இலக்காக துரத்திய இங்கிலாந்து 4வது நாள் முடிவில் 336/6 என்ற நிலையில் வலுவாக இருந்த போது மழை வந்தது.
அந்த நிலையில் இன்று நடைபெற்ற கடைசி நாள் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டதால் இந்தியா கண்டிப்பாக தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்போது மனதில் தெம்பை விடாத முஹமது சிராஜ் அபாரமாக பவுலிங் செய்து ஜேமி ஸ்மித்தை 2 ரன்னில் காலி செய்து மறுபுறம் சவாலைக் கொடுத்த ஓவர்டனை 9 ரன்களில் அவுட்டாக்கினார்.
ஆட்டநாயகன் சிராஜ்:
அதே போல பிரசித் கிருஷ்ணா தக்க சமயத்தில் ஜோஸ் டாங்கை டக் அவுட்டாக்கினார். இறுதியில் 17 ரன்கள் அடித்து சவாலை கொடுத்த அட்கின்சனையும் 17 ரன்னில் போல்டாக்கிய சிராஜ் இந்தியாவை வெறும் 6 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார். அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக 10 ரன்னுக்கும் குறைவாக வென்று இந்தியா வரலாறு காணாத சாதனை படைத்தது.
மேலும் 2 – 2 (5) என்ற கணக்கில் இத்தொடரை சமன் செய்த இந்தியா ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை இங்கிலாந்துடன் பகிர்ந்து கொண்டது. அத்துடன் படுதோல்வியை சந்திக்கும் என்று கணித்த முன்னாள் இங்கிலாந்து வீரர்களின் முகத்திலும் இளம் இந்தியா கரியை பூசியது. இந்த வெற்றிக்கு 5 விக்கெட்டுகள் எடுத்து முக்கிய பங்காற்றிய சிராஜ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
ஹாரி ப்ரூக் கேட்ச்:
இந்நிலையில் ஹாரி ப்ரூக் கேட்ச்சை நேற்று தவற விட்ட போது கதை முடிந்தது என்று நினைத்ததாக சிராஜ் கூறியுள்ளார். இருப்பினும் இன்று காலை தம்மால் முடியும் என்று நினைத்ததே வெற்றிக்கு உதவியதாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் நாங்கள் முதல் நாளிலிருந்து இப்போது வரை வெற்றிக்காக போராடினோம்”
“ஒரே இடத்தில் சரியாக பௌலிங் செய்து எதிரணிக்கு அழுத்தத்தை உண்டாக்க வேண்டும் என்னுடைய திட்டமாகும். அங்கிருந்து எனக்கு அனைத்தும் போனசாக கிடைத்தது. இன்று காலை எழுந்த போது என்னால் முடியும் என்று நம்பினேன். “நம்பு” என்ற வாசகம் அடங்கிய புகைப்படத்தை கூகுளில் டவுன்லோட் செய்து மொபைலில் வைத்தேன்”
இதையும் படிங்க: ஜோ ரூட்டை பார்த்து இதைத்தான் சொன்னேன்.. அவரு கொஞ்சம் கோபமாகிட்டாரு – பிரசித் கிருஷ்ணா வெளிப்படை
“ஹாரி ப்ரூக் கேட்ச் தவற விட்டது திருப்புமுனை என்று நினைத்தேன். அதைப் பிடித்திருந்தால் இன்று வரை போட்டி வந்திருக்காது. அதன் பின் அடித்து நொறுக்கிய அவருக்கு தலை வணங்குகிறேன். அதனால் போட்டி முடிந்ததாகவும் நினைத்தேன். இருப்பினும் இன்று காலை என்னால் கேம் சேஞ்ஜராக இருக்க முடியும் என்று கருதினேன். லார்ட்ஸ் போட்டியில் முயன்றும் தோற்றது இதயத்தை உடைத்தது. அன்று உன்னுடைய அப்பாவை நினைத்துக் கொண்டு பந்தை தடு என்று ஜடேஜா பாய் சொன்னார்” எனக் கூறினார்.



