இங்கிலாந்து அணிக்கு எதிராக லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்த ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அசத்தலான செயல்பாட்டை வெளிப்படுத்திய இந்திய அணியானது 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்து அசத்தியது.
முதல் ஆசிய பவுலராக முகமது சிராஜ் நிகழ்த்திய சாதனை :
ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் பும்ரா இல்லாத குறையை போக்கும் வகையில் முதல் இன்னிங்சின் போது நான்கு விக்கெட்டுகளையும், இரண்டாவது இன்னிங்ஸின்போது ஐந்து விக்கெட்டுகளையும் கைப்பற்றி மொத்தமாக இந்த போட்டியில் 9 விக்கெட் விழ காரணமாக இருந்தார்.
அவரது இந்த சிறப்பான பந்துவீச்சு காரணமாகவே இந்திய அணி வெற்றி பெற்றதால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கிடைத்தது. அதுமட்டும் இன்றி இந்த தொடர் முழுவதுமே 5 போட்டிகளில் விளையாடிய அவர் 23 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் பும்ராவின் மாபெரும் சாதனை ஒன்றினையும் சமன் செய்துள்ளார்.
அதாவது கடந்த 2021-22 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது ஒரே தொடரில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்த பும்ரா இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய வீரராக முதலிடத்தில் இருந்தார். இந்நிலையில் அவரது அந்த சாதனையை சமன் செய்துள்ள சிராஜும் இந்த தொடரில் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.
இதை தவிர்த்து ஆசிய வீரராக இங்கிலாந்து மண்ணில் அதிக முறை 4 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றிய வீரர் என்ற சாதனையையும் முகமது சிராஜ் படைத்துள்ளார். இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்தில் விளையாடியுள்ள முகமது சிராஜ் ஏழாவது முறையாக நான்கு விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றியுள்ளார்.
இதையும் படிங்க : இதுதான் சரியான நேரம்.. அவரை தூக்கிட்டு சுப்மன் கில்லை கேப்டனா போடுங்க – கவாஸ்கர் கொடுத்த யோசனை
இவருக்கு முன்னதாக இலங்கையை சேர்ந்த முரளிதரன், பாகிஸ்தானை சேர்ந்த வக்கார் யூனிஸ் ஆகிய இருவரும் தலா 6 முறை நான்கு விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி இருந்த வேளையில் அவர்கள் இருவரையும் கடந்து முகமது சிராஜ் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



