கிண்டலடிச்சதுக்கு மன்னிச்சுடுங்க, பும்ராவை ஓரம் கட்டிய சிராஜ் ஒருநாள் கிரிக்கெட்டில் புதிய சாதனை – ரசிகர்கள் பாராட்டு

Mohammad-Siraj-1
- Advertisement -

2023 அக்டோபர் மாதம் சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் ஐசிசி உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் முதலில் இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2 – 1 (3) என்ற கணக்கில் வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக உலகின் நம்பர் ஒன் அணியாக களமிங்கிய நியூசிலாந்தை 3 போட்டிகளிலும் சாய்த்து 3 – 0 (3) என்ற கணக்கில் ஒய்ட் வாஷ் வெற்றியுடன் கோப்பையை வென்றது. அதனால் சொந்த மண்ணில் தன்னை வலுவான அணி என்பதை நிரூபித்த இந்தியா ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி தரவரிசையில் 3வது இடத்திலிருந்து முதலிடம் பிடித்து உலகின் புதிய நம்பர் ஒன் அணியாக சாதனை படைத்தது.

அதே சமயம் நம்பர் ஒன் அணியாக களமிறங்கிய நியூசிலாந்து அடுத்தடுத்த தோல்விகளால் 3வது இடத்திற்கு சரிந்தது. இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான முழு புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் டாப் 10 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இரட்டை சதமடித்து தொடர் நாயகன் விருது வென்ற சுப்மன் கில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 7வது இடத்தில் விராட் கோலியும் 9வது இடத்தில் ரோகித் சர்மாவும் உள்ளனர். அதை விட பந்து வீச்சாளர்களுக்கான டாப் 10 தரவரிசையில் இந்தியாவிலிருந்து முகமது சிராஜ் மட்டுமே உள்ளார்.

- Advertisement -

மன்னிச்சுடுங்க சிராஜ்:
அதுவும் ஆஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசல்வுட்டை முந்திய அவர் முதலிடத்தைப் பிடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் உலகின் புதிய நம்பர் ஒன் பந்து வீச்சாளராக சாதனை படைத்துள்ளார். உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் அசத்தியதால் கடந்த 2017ஆம் ஆண்டு டி20 கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் ஆரம்பத்தில் தடுமாற்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். குறிப்பாக 2020 வாக்கில் ஐபிஎல் தொடரை போலவே ரன்களை வாரி வழங்கிய அவரை ஏராளமான ரசிகர்கள் அசோக் தின்டாவின் அடுத்த வாரிசு என்று கிண்டலடித்த காலங்களை மறக்க முடியாது.

குறிப்பாக உங்களது தந்தையைப் போல் ஆட்டோ ஓட்ட செல்லுங்கள் என்று ரசிகர்கள் போர்வையில் அவரை பிடிக்காத சிலர் வேண்டுமென்றே விமர்சித்தனர். அதே போலவே ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக தடுமாறிய அவர் மனம் தளராமல் தனது ஆட்டத்தில் முன்னேற்றத்தை ஏற்படுத்தி வந்த நிலையில் 2021 ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் மிகச்சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினார். அதனால் முதலில் டெஸ்ட் அணியில் நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு 2020/21இல் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் காபா வெற்றி உட்பட கிடைத்த வாய்ப்புகளில் அசத்தலாக செயல்பட்ட அவர் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.

- Advertisement -

அதே போல் 2021இல் இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் முதல் 4 போட்டிகளின் முடிவில் இந்தியா 2 – 1 என்ற கணக்கில் முன்னிலை பெறுவதற்கு அற்புதமாக பந்து வீசிய அவர் அந்த அனுபவத்தை பயன்படுத்தி ஒருநாள் கிரிக்கெட்டிலும் அசத்த தொடங்கினார். குறிப்பாக சமீபத்திய இலங்கை தொடரில் 9 விக்கெட்டுகளை சாய்த்த அவர் நியூசிலாந்து தொடரில் 5 விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்டார்.

அதிலும் குறிப்பாக காயமடைந்த பும்ரா இல்லாத குறை தெரியாத அளவுக்கு பவர் பிளே, மிடில் ஓவர், டெத் ஓவர்கள் என போட்டியின் அனைத்து நேரங்களிலும் சிறப்பாக செயல்பட்டு விக்கெட்டுகளை எடுத்த அவர் சமீப காலங்களில் முன்னேற்றத்தைக் கண்ட மிகச்சிறந்த பவுலர் என்று அனைவரது பாராட்டுகளை பெற்றார். அதனால் பும்ரா பொறுமையாக ஐபிஎல் தொடரில் விளையாடட்டும் இவர் 2023 உலக கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடட்டும் என்று அன்று கிண்டலடித்த அதே ரசிகர்கள் தற்போது பாராட்டி வருகிறார்கள்.

இதையும் படிங்க: விராட் கோலி போன்ற யாரும் தொடாத உச்சம் – டி20 கிரிக்கெட்டில் முதல் ஐசிசி இந்தியராக புதிய வரலாறு படைத்த சூரியகுமார் யாதவ்

அந்த நிலைமையில் ஐசிசி தரவரிசையிலும் பும்ரா உள்ளிட்ட இதர இந்திய பவுலர்களை ஓரம் கட்டி நம்பர் ஒன் பவுலராக முன்னேறியுள்ள அவரது விடாமுயற்சியையும் கடின உழைப்பையும் பார்க்கும் ரசிகர்கள் ஆரம்ப காலங்களில் கிண்டலடித்ததற்கு மன்னித்து விடுங்கள் என்று சமூக வலைதளங்களில் பாராட்டுவதை பார்க்க முடிகிறது.

Advertisement