இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி கடந்த 2013-ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி இதுவரை 64 டெஸ்ட் போட்டிகள், 120 ஒருநாள் போட்டிகள் மற்றும் 23 டி20 போட்டிகள் என மூன்று வகையான அணியிலும் இடம் பிடித்து விளையாடி உள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது அசத்தலான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவர் முன்னணி பவுலராக இருந்து வரும் வேளையில் காயத்தால் தற்போது இந்திய அணியில் இருந்து விலகி உள்ளார்.
இந்திய அணியின் தவிர்க்க முடியாத பந்துவீச்சாளரான முகமது ஷமி உலக கோப்பை போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார். மொத்தம் 18 போட்டியில் விளையாடியுள்ள அவர் 55 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதோடு ஒட்டுமொத்த உலககோப்பை கிரிக்கெட் வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.
2019-ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டியை யாராலும் மறந்துவிட முடியாது. அந்த போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து அந்த தொடரில் இருந்து வெளியேறியது. அந்த உலகக்கோப்பை தொடரில் ஷமி 4 போட்டிகளில் விளையாடி 14 விக்கட்டுகளை வீழ்த்தி இருந்தார்.
ஆனாலும் அவருக்கு அந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்களிலும் இறுதி நேரத்திலும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில் 2019-ஆம் ஆண்டு தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து தற்போது ஏமாற்றத்தை பகிர்ந்துள்ள முகமது ஷமி கூறுகையில் : 2019-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரின் முதல் சில போட்டிகளில் நான் விளையாடவில்லை.
பின்னர் எனக்கு கிடைத்த வாய்ப்பில் அடுத்தடுத்த போட்டிகளில் பல விக்கெட்டுகளையும் கைப்பற்றினேன். அதேபோன்று 2023-ஆம் ஆண்டும் என்னால் சிறப்பாக விக்கெட்டுகளை கைப்பற்ற முடிந்தது. ஆனாலும் எனக்கு 2019-ஆம் ஆண்டு எதிர்பார்த்த அளவில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதிலும் குறிப்பாக 3 போட்டிடிகளில் 13 விக்கெட்டுகளை வீழ்த்திய என்னிடம் என்ன எதிர்பார்த்தார்கள்? என்று தெரியவில்லை.
இதையும் படிங்க : ரசிகர்களுக்கு நன்றி.. ஏஆர் ரஹ்மான் ஸ்டைலில் துவங்கிய சூரியகுமார்.. இந்திய டி20 கேப்டனாக கொடுத்த முதல் மெசேஜ்
என்னிடம் அதற்கான கேள்விகளும் இல்லை. பதிலும் இல்லை. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் என்னை நிரூபித்துக் கொண்டுதான் இருந்தேன். ஒருவருக்கு வாய்ப்பு கொடுத்தால் நிரூபிக்க தான் முடியும். ஆனாலும் என்னை தொடர்ந்து விளையாட வைக்காதது ஏமாற்றம் அளித்ததாக முகமது ஷமி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



