இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர். சமீபத்திய நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களில் அவர்கள் இருவருமே தடுமாற்றமாக விளையாடி இந்தியாவின் தோல்விக்கு காரணமாக அமைந்தனர். அதிலும் ஆஸ்திரேலிய தொடரில் ரோஹித் சர்மா ஒரு அரை சதம் கூட அடிக்கவில்லை.
அதன் காரணமாக அடுத்து நடைபெறும் இங்கிலாந்து தொடரில் அவரை கழற்றி விட பிசிசிஐ முடிவெடுத்தது. அதற்கு முன்பாக ரோஹித் சர்மா கேப்டனாக மரியாதையுடன் ஓய்வு பெற்றார். அடுத்த சில நாட்களில் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதற்கு முன்பாக கடந்த டிசம்பர் மாதம் ரவிச்சந்திரன் அஸ்வின் ஓய்வு பெற்றது இந்திய ரசிகர்களுக்கு பெரிய ஏமாற்றமாக அமைந்தது.
உருட்டல் செய்தி:
அந்த ஏமாற்றம் மறப்பதற்குள் தற்போது ரோஹித், விராட் கோலி ஆகிய 2 ஜாம்பவான்கள் ஓய்வு பெற்றுள்ளது இந்திய ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் முகமது ஷமியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு பெற உள்ளதாக செய்தி வெளியாகின. 2023 உலகக்கோப்பையில் காயத்தை சந்தித்த அவர் அறுவை சிகிச்சைக்கு பின் ஒரு வழியாக கடந்த இங்கிலாந்து டி20 தொடரில் கம்பேக் கொடுத்தார்.
அப்படியே 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றியில் தம்முடைய பங்கையும் ஆற்றினார். இருப்பினும் 2025 ஐபிஎல் தொடரில் தடுமாற்றமாக பவுலிங் செய்த ஷமி லேசான காயத்தைச் சந்தித்துள்ளதாக “ஒன்இந்தியா” எனும் இணையத்தில் செய்து வெளியானது. அதனால் அஸ்வின், ரோஹித், கோலி வரிசையில் ஷமி ஓய்வு பெற உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டது.
ஷமி விளாசல்:
இந்நிலையில் அந்த செய்தியை பார்த்த முகமது ஷமி அற்புதமாக கதை எழுதுகிறீர்கள் என்று அந்த ஊடகத்தை சாடியுள்ளார். இது பற்றி அந்த ஊடகம் வெளியிட்ட செய்தியை ஸ்கிரீன்ஷாட் எடுத்து தமது இன்ஸ்டாகிராமில் ஷமி பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “வெல்டன் மகாராஜ். நீங்கள் உங்களுடைய வேலையில் இன்னும் இருக்கிறீர்கள் என்பதை எண்ணிக் கொள்ளுங்கள்”
இதையும் படிங்க: இந்த வாய்ப்பை எனக்கு குடுத்தா சந்தோஷமா அதை ஏத்துக்க ரெடியா இருக்கேன் – ஜிதேஷ் ஷர்மா பேட்டி
“சில நேரங்களில் நீங்கள் சில நல்ல விஷயங்களை சொல்ல வேண்டும். ஆனால் இது இன்றைய நாளின் மிகவும் மோசமான கதையாகும்” என்று கூறினார். இதிலிருந்து முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவார் என்று தெரிய வருகிறது. கடந்த ஆஸ்திரேலிய தொடரில் அவர் விளையாடாதது இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.



