அவ்ளோதான் ஷமியின் கேரியர் முடிஞ்ச்சி, தேர்வுக்குழு மறைமுக அறிவிப்பு – வெளியான புதிய தகவல் இதோ

shami
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வேலைகளில் உலகின் அனைத்து அணிகளும் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த வருடம் விராட் கோலி தலைமையில் நாக்-அவுட் சுற்றுக்கு கூட தகுதி பெற முடியாமல் பாகிஸ்தானிடம் படுதோல்வியை சந்தித்து வெளியேறிய இந்தியா இம்முறை 5 ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ள ரோகித் சர்மா தலைமையில் களமிறங்க தயாராகி வருகிறது. அதற்கு முன்பாக தரமான வீரர்களை கண்டறியும் வேலைகளில் ஈடுபட்டுள்ள அணி நிர்வாகம் நிறைய இளம் வீரர்களுக்கு சுழற்சி முறையில் வாய்ப்பளித்து வருகிறது. அதேசமயம் சுமாராக செயல்படும் சீனியர் வீரர்களை கழற்றி விடும் வேலைகளும் நடைபெற்று வருகின்றன.

shami 1

அந்த வகையில் கடந்த டி20 உலக கோப்பையில் ஜஸ்பிரித் பும்ரா, புவனேஸ்வர் குமார் ஆகியோருடன் விளையாடிய சீனியர் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமிக்கு இந்த வருடம் பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்காது என தெரியவருகிறது. கடைசியாக கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் 3வது வேகப்பந்து வீச்சாளராக முழுமையாக விளையாடிய அவர் சுமாராக பந்து வீசியதாலும் ஹர்ஷல் படேல், பிரசித் கிருஷ்ணா, அர்ஷிதீப் சிங் போன்ற நிறைய இளம் வேகப்பந்து வீச்சாளர்கள் வந்துவிட்ட காரணத்தாலும் அவருக்கு அதன்பின் ஒரு டி20 போட்டியில் விளையாடும் வாய்ப்பு கூட கொடுக்கப்படவில்லை.

- Advertisement -

ஐபிஎல் அசத்தல்:
இத்தனைக்கும் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் இப்போதும் முதன்மையான பந்துவீச்சாளராக விளையாடும் அவர் குறிப்பாக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதால் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வரமாட்டார் என்ற அச்சிடப்படாத முத்திரையுடன் கண்டு கொள்ளப்படுவதில்லை. ஆனால் ஐபிஎல் தொடரில் முடிந்தளவு சிறப்பாக செயல்படும் அவர் இந்த வருடம் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 16 போட்டிகளில் 20 விக்கெட்டுகளை 8.00 என்ற நல்ல எக்கனாமியில் எடுத்து முதல் வருடத்திலேயே கோப்பையை வெல்ல முக்கிய பங்காற்றினார்.

Shami 1

அதனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட தினேஷ் கார்த்திக்கை தேர்வு செய்ததை போல அவரையும் இந்திய அணிக்கு தேர்வு செய்ய வேண்டும் என்று பார்த்தீவ் பட்டேல் மற்றும் முன்னாள் வீரர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால் 31 வயதைக் கடந்து விட்டதாலும் அர்ஷிதீப் சிங் போன்ற இளம் பந்துவீச்சாளர்கள் வந்து விட்டதாலும் இனிமேல் இந்திய டி20 அணியில் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடையாது என்று தேர்வுக்குழு கருதுகிறது.

- Advertisement -

தேர்வுக்குழு அறிவிப்பு:
இது பற்றி அவரிடம் ஏற்கனவே தேர்வுக்குழுவினர் வெளிப்படையாகவும் நேராகவும் தெரிவித்து விட்டதாகவும் புதிய செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் அவரின் பணிச்சுமையை கருத்தில் கொண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் புத்துணர்ச்சியுடன் விளையாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் தேர்வுக் குழுவில் இடம் வகிக்கும் ஒரு உறுப்பினர் அளித்துள்ள பேட்டியில் பேசியது பின்வருமாறு.

Shami

“ஷமி இனிமேல் இளமையான வீரராக மாற முடியாது என்பதால் அவர் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் புத்துணர்ச்சியுடன் விளையாட நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான் அவரை டி20 கிரிக்கெட்டில் நாங்கள் தேர்வுக்கு எடுத்துக்கொள்வதில்லை. கடந்த டி20 உலகக்கோப்பைக்கு பின்பாக அவரின் பணிச்சுமை பற்றி அவரிடம் நாங்கள் பேசி விட்டோம். எனவே இது தான் இனிமேல் நடக்கப் போகிறது.

- Advertisement -

அதனால் தற்போதைக்கு அவர் இந்திய டி20 அணியில் விளையாடும் திட்டம் இல்லை. மேலும் அவருக்கு பதிலாக இளம் வீரர்களின் மேல் நாங்கள் கவனம் செலுத்த தயாராகிவிட்டோம்” என்று கூறினார். சமீபத்தில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளதால் உங்களுக்கு வாய்ப்பில்லை என்று டெஸ்ட் அணியில் விளையாடிய சீனியர் இந்திய வீரர் ரிதிமான் சஹாவிடம் இதேபோல் தேர்வுக்குழு வெளிப்படையாக தெரிவித்து விட்டது.

Shami

அதேபோல் மற்றொரு சீனியர் பேட்ஸ்மேன் ஷிகர் தவானும் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் கழட்டி விடப்பட்டு ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டும் 2வது தர இந்திய அணியில் விளையாடி வருகிறார்.

இதையும் படிங்க : உங்க அடிமையாவே நாங்க இருக்கணுமா? – ஆஸி, இங்கி வாரியங்களுக்கு கவாஸ்கர் கேள்வி, நடந்தது என்ன?

அந்த வகையில் இனிமேல் முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் தான் அதிகமாக விளையாடுவார் என்று தெரிவித்துள்ள தேர்வுக்குழு அவ்வாறு செய்வது அவருக்கும் பணிச் சுமையை குறைத்து ஒரு வகையான கிரிக்கெட்டில் மட்டும் சிறப்பாக செயல்பட உதவும் என்று கூறியுள்ளது. இந்தியாவுக்காக 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள ஷமி 18 விக்கெட்டுகளை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement