
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக 5 சதங்களை அடித்து அற்புதமான சாதனை படைத்தது. ஆனால் பேட்டிங்கில் சிறப்பாக ஃபினிஷிங் செய்யத் தவறியதும் ஃபீல்டிங் துறையில் 7 கேட்சுகள் தவற விட்டதும் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க முக்கிய காரணமானது.
அதே போல பவுலிங் துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா தனி ஒருவனாக வெற்றிக்கு போராடினார். அவருக்கு முகமது சிராஜ் போன்ற மற்ற பவுலர்கள் கை கொடுக்காதது இங்கிலாந்தின் வெற்றியை எளிதாக்கியது. இந்நிலையில் சிராஜ் உள்ளிட்ட மற்ற பவுலர்கள் பும்ராவிடம் ஆலோசனை கேட்டு முன்னேற வேண்டும் என்று முகமது ஷமி அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன் பும்ராவுடன் சேர்ந்து மற்ற பவுலர்கள் திட்டங்களை வகுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். மற்ற பவுலர்கள் அதிகமாக விக்கெட்டுகளை எடுக்கவில்லை என்றாலும் அதிக ரன்களை வாரி வழங்குவதை நிறுத்தினாலே இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைக்க முடியும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் ஷமி பேசியது பின்வருமாறு.
“பவுலிங் துறையில் இந்திய பவுலர்கள் பும்ராவிடம் பேசி அவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும். எப்படி திட்டங்களை வகுக்க வேண்டும் என்பதை பற்றி அவர்கள் பும்ராவிடம் பேசி அவருக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். ஒருவேளை அவர்கள் பும்ராவுக்கு போதுமான ஆதரவு கொடுத்தால் இந்தியாவை எளிதாக வெற்றி பெற வைக்க முடியும்”
“முதல் போட்டியை பார்க்கும் போது நம்முடைய பவுலிங் இன்னும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும் என்பது தெரிந்தது. 2வது இன்னிங்ஸில் தாக்கூர் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகள் எடுத்தார்கள். ஆனால் தாக்கூர் 2 விக்கெட்டுகள் எடுத்த போது போட்டி இந்தியாவின் கைநழுவி சென்று விட்டது. இங்கிலாந்தில் பேட்டிங் செய்வது கடினம் என்று பலரும் சொல்கிறார்கள்”
இதையும் படிங்க: சொதப்பியதை நம்ப முடியல.. ஜடேஜாவிடம் இந்த டெக்னிக்கை ரிஷப் பண்ட் ஆச்சும் சொல்லனும்.. மார்க் பட்சர்
“ஆனால் நம்முடைய பேட்ஸ்மேன்கள் அங்கே நன்றாக செயல்படுகிறார்கள். வெற்றிக்கு பவுலிங் மற்றும் ஃபீல்டிங் துறையில் முன்னேறுவதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். புதிய பந்தில் விக்கெட்டுகளை எடுப்பது மிகவும் முக்கியம். அதை விட பும்ராவுக்கு உதவி செய்வது முக்கியம். நாம் அதிக ரன்கள் கொடுத்த காரணத்தாலேயே இங்கிலாந்து முதல் போட்டியில் வென்றது. நமது பவுலிங் துறையை வலுவாக மாற்றுவதற்கான வழியைக் கண்டறிய வேண்டும்” என்று கூறினார்.