இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. அத்தொடர் வரும் நவம்பர் 14 மற்றும் 22 ஆகிய தேதிகளில் கொல்கத்தா, கௌகாத்தியில் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக தென்னாபிரிக்க ஏ அணிக்கு எதிராக அக்டோபர் 30, நவம்பர் 6 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் இந்தியா ஏ அணி 2 பயிற்சி டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
அத்தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்தியா ஏ அணியின் கேப்டனாக காயத்திலிருந்து குணமடைந்துள்ள ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்த அணியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முகமது ஷமி தேர்ந்தெடுக்கப்படவில்லை. 2023 உலகக் கோப்பையில் காயத்துடன் விளையாடி இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றிய அவர் அறுவை சிகிச்சை மேற்கொண்டார்.
கழற்றி விடப்படும் ஷமி:
அதனால் கடந்த ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரை விளையாடாத அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் தேர்வாகி இந்தியாவின் வெற்றியில் தம்முடைய பங்காற்றினார். இருப்பினும் அடுத்து நடைப்பெற்ற இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் முகமது ஷமி ஃபிட்டாக இல்லை என்று சொல்லி தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கழற்றி விட்டார். அத்துடன் ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரிலும் அவருக்கு இடம் கிடைக்கவில்லை.
அதனால் ஏமாற்றமடைந்த ஷமி ரஞ்சிக் கோப்பையில் விளையாடும் தம்மால் ஒருநாள் போட்டியில் விளையாட முடியாதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு “ஒருவேளை ஷமி ஃபிட்டாக இருந்தால் இந்நேரம் ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணியின் விமானத்தில் இருந்திருப்பார்” என்று அகர்கர் மீண்டும் உறுதியாக சொன்னார். அதே சமயம் வருங்காலங்களில் ஷமி ஃபிட்டாகி நன்றாக விளையாடினால் கதை மாறலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
முடியும் கேரியர்:
அந்த சூழ்நிலையில் 2025/26 ரஞ்சிக் கோப்பையில் உத்தரகாண்ட்டுக்கு எதிராக 39 ஓவர்களை வீசிய முகமது ஷமி 11 மெய்டன் உட்பட 7 விக்கெட்டுகள் எடுத்தார். அதனால் பெங்கால் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றிய அவர் ஆட்டநாயகன் விருது வென்று தன்னுடைய ஃபிட்னஸை நிருபித்தார். அதன் காரணமாக அடுத்த தென்னாப்பிரிக்க தொடரில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையும் படிங்க: ருதுராஜ் இஸ் பேக்.. ரிஷப் பண்ட் தலைமையில் தெ.ஆ தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்தியா ஏ அணி
ஆனால் தற்போது தென்னாப்பிரிக்கா ஏ அணிக்கு எதிரான இந்தியா ஏ அணியிலேயே ஷமிக்கு இடம் கிடைக்கவில்லை. இதிலிருந்து தேர்வுக்குழுவை எதிர்த்து பேசியதால் இந்தியா ஏ அணியில் கூட அவருக்கு இடம் கிடைக்கவில்லை என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கிறார்கள். மேலும் விராட், ரோஹித், புஜாரா, ரஹானே வரிசையில் சீனியர் வீரரான முகமது ஷமியின் இந்திய கேரியரையும் தேர்வுக்குழு முடித்து வைக்க துவங்கியுள்ளதாக ரசிகர்கள் விமர்சிப்பது குறிப்பிடத்தக்கது.



