இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி காயத்திலிருந்து குணமடைந்து ரஞ்சிக் கோப்பையில் விளையாடி வருகிறார். கடந்த 2023 உலகக் கோப்பையில் காயத்துடனேயே விளையாடி இந்தியா ஃபைனல் வரை செல்ல முக்கிய பங்காற்றிய அவர் பின்னர் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அதன் பின் சுமார் ஒரு வருடம் குணமடைவதற்கு எடுத்துக் கொண்ட அவர் அடுத்து நடைபெறும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
இருப்பினும் தற்போது ரஞ்சிக் கோப்பையில் மத்திய பிரதேசத்துக்கு எதிரான போட்டியில் அவர் 19 ஓவரில் 54 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகள் எடுத்தார். அது போக பேட்டிங்கில் இரண்டாவது இன்னிங்ஸில் அவர் 10வது இடத்தில் களமிறங்கி அதிரடியாக 37 (36) ரன்கள் எடுத்தார். அந்த வகையில் ஷமி சென்ற வாக்கிலேயே மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் என்று சொல்லலாம்.
ஷமி கம்பேக்:
அதன் காரணமாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அவர் விரைவில் இந்திய அணிக்காக விளையாடுவார் செல்வார் என்று நம்பப்படுகிறது. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடும் பவுலர்களுக்கு ஒரே நாளில் 4 ஓவர்களுக்கு மேல் வீசத் தெரியாது என பெங்கால் அணியின் பயிற்சியாளர் ரத்தன் லக்ஷ்மி சுக்லா தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.
“ஷமி 6 ஓவர், 5 ஓவர் கொண்ட ஸ்பெல்களை வீசினார். ஐபிஎல் தொடரில் விளையாடும் பவுலர்களுக்கு 4 ஓவர்களுக்கு மேல் வீச தெரியாது. ஆனால் ஷமி அதிரடியாக நீண்ட நேரம் வீசினார். அவர் ஒரு வேகப்பந்து வீச்சாளர் வீச வேண்டிய பந்துகளை வீசினார். ஒரு வருடம் கழித்து அவரைப் போல் வேகப்பந்து வீச்சாளர் இவ்வளவு வலுவாக கம்பேக் கொடுத்து நான் பார்த்ததில்லை” என்று கூறினார்.
ஆஸ்திரேலியாவில் எப்போது:
அதே போல அவருடைய சிறு வயது பயிற்சியாளர் முகமது பத்ருதீன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3வது போட்டியில் இந்தியாவுக்காக ஷமி விளையாடுவார் என்று தகவல் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அடிலெய்ட் நகரில் நடைபெறும் இரண்டாவது போட்டிக்கு பின் ஷமி இந்திய அணியுடன் இணைவார். தற்போது மீண்டும் வந்துள்ள அவர் அது ஃபிட்னஸை நிரூபித்து விக்கெட்டுகளை எடுத்துள்ளார்”
இதையும் படிங்க: 2 போர்ஸ் 2 சிக்ஸ்.. பவுலிங் மட்டுமல்ல பேட்டிங்கிலும் அட்டகாச கம்பேக் கொடுத்த ஷமி.. ஆஸியில் விளையாடுவது உறுதி
“எனவே அவர் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் தொடரில் இரண்டாவது பகுதியில் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காக இருப்பார்” என்று கூறினார். மொத்தத்தில் ஆரம்பத்தில் ஷமி ஆஸ்திரேலியா தொடரில் முழுமையாக விளையாட மாட்டார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது அவர் ஆஸ்திரேலியாவில் விளையாட உள்ளது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.



