சயீத் முஷ்டாக் அலி கோப்பை 2024 டி20 தொடரில் நவம்பர் 9ஆம் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் காலிறுதிக்கு முந்தைய முதல் சுற்று நடைபெற்றது. அதில் பெங்கால் மற்றும் சண்டிகர் அணிகள் மோதின. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற சண்டிகர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதை அடுத்து களமிறங்கிய பெங்கால் 20 ஓவரில் 159-9 ரன்கள் குவித்தது.
அதிகபட்சமாக கரண் லால் 33 (25), ரித்திக் சாட்டர்ஜி 28 (12), பிராமனிக் 30 (24) ரன்கள் எடுத்தார்கள். அவர்களை விட கடைசி நேரத்தில் களமிறங்கிய முகமது ஷமி 3 பவுண்டரி 2 சிக்ஸருடன் 32* (17) ரன்கள் எடுத்து அற்புதமான ஃபினிஷிங் கொடுத்தார். சண்டிகருக்கு அதிகபட்சமாக ஜெக்ஜித் சிங் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஷமி அபாரம்:
பின்னர் 160 ரன்களை துரத்திய சண்டிகர் 20 ஓவரில் கடினமாக போராடியும் 156-9 ரன்கள் மட்டுமே எடுத்த தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கேப்டன் மனன் வோஹ்ரா 23, ராஜ் பாவா 32 (20), பிரதீப் யாதவ் 27 (19), நிகில் சர்மா 22 ரன்கள் எடுத்தார்கள். பெங்கால் அணிக்கு அதிகபட்சமாக சயன் கோஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார்.
முகமது ஷமி 4 ஓவரில் 25 ரன்கள் கொடுத்து 1 விக்கெட் எடுத்து அசத்தினார். அதனால் 3 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பெங்கால் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த வகையில் இப்போட்டியில் ஷமி எடுத்த 32* ரன்கள் பெங்கால் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியது என்றே சொல்லலாம். மேலும் அவரது பேட்டிங்கை பார்த்த இந்திய ரசிகர்கள் ஆஸ்திரேலியாவில் கேப்டன் ரோகித் சர்மாவின் ஆட்டத்தை விட ஷமியின் பேட்டிங் அபாரமாக இருப்பதாக சமூக வலைதளங்களில் பாராட்டுகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் எப்போது:
2023 உலகக் கோப்பையில் சந்தித்த காயத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்ட ஷமி கடந்த ரஞ்சிக் கோப்பையில் விளையாடி அசத்தினார். அதைத் தொடர்ந்து சயீத் முஷ்டாக் அலி கோப்பையில் இதையும் சேர்த்து மொத்தம் அவர் 8 போட்டிகளில் முழுமையாக விளையாடியுள்ளார். அதனால் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடரில் இந்திய அணிக்காக அவர் எப்போது விளையாடுவார்? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதையும் படிங்க: ஹெட் சண்டையை விடுங்க.. இப்படி ஓடுவதற்காகவே சிராஜுக்கு ஐசிசி தண்டனை கொடுக்கனும்.. கிளார்க் விளாசல்
ஆனால் 100% இன்னும் குணமடையாததாலேயே அவர் விளையாடவில்லை என்று கேப்டன் ரோஹித் 2வது போட்டியின் முடிவில் கூறியிருந்தார். மேலும் ஷமி 4வது போட்டியில் அவர் விளையாடுவார் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்திருந்தார். இருப்பினும் சயீத் முஷ்டாக் அலி தொடரில் தொடர்ந்து அட்டகாசமாக செயல்படும் ஷமி 3வது போட்டியில் விளையாட வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.



