
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பெரிய தொடரில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் 5 சதங்கள் அடித்தும் இந்தியா பரிதாபமாக தோற்றது. ஆனால் அதற்காக அசராத இந்தியா இரண்டாவது போட்டியில் பர்மிங்காம் மைதானத்தில் முதல் முறையாக இங்கிலாந்தை தோற்கடித்து 336 ரன்கள் வித்தியாசத்தில் பிரம்மாண்ட சாதனை வெற்றி பெற்றது.
அதனால் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்த இந்தியா 3வது போட்டியில் வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஏனெனில் 2வது போட்டியில் ஓய்வெடுத்த ஜஸ்ப்ரித் பும்ரா 3வது போட்டியில் விளையாடினார். அந்த நிலையில் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 3வது போட்டியில் ஜஸ்ப்ரித் பும்ரா எதிர்பார்த்ததைப் போலவே 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார்.
ஆனால் முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் இங்கிலாந்து போலவே 387 ரன்கள் எடுத்த இந்தியா ஸ்கோரை சமன் மட்டுமே செய்தது. 2வது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 192 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா எளிதாக வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் பேட்டிங்கில் ராகுல் 33 ரன்கள் எடுத்ததைத் தவிர்த்து மற்ற டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை எடுக்கத் தவறினர்.
அதனால் லோயர் ஆர்டரில் டெயில் எண்டர்களுடன் சேர்ந்து ஜடேஜா 61* ரன்களை எடுத்தும் 22 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோற்றது ரசிகர்களை சோகமடைய வைத்தது. இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியை சந்திக்க கேப்டன் சுப்மன் கில்லின் அணுகுமுறையே காரணம் என்று முன்னாள் இந்திய வீரர் முகமது கைஃப் சாடியுள்ளார். குறிப்பாக 3வது நாள் முடிவில் நேரத்தை வீணடித்த ஜாக் கிராவ்லியிடம் கையை நீட்டி மோசமான வார்த்தைகளை சொல்லி கில் வாக்குவாதம் செய்தார்.
அதுவே 336 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து செய்வதறியாது தவித்த இங்கிலாந்துக்கு வெற்றி பெறும் உத்வேகத்தை கொடுத்ததாக கைஃப் கூறியுள்ளார். எனவே எம்மாதிரியான அணுகுமுறையை பின்பற்ற வேண்டும்? என்பதை கில் கற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “கில் ஜாக் கிராவ்லியுடன் சண்டை போட்டது இங்கிலாந்தை உசுப்பேற்றியது”
இதையும் படிங்க: லார்ட்ஸ் போட்டியின் மிகச்சிறந்த தருணம் அதுதான்.. இங்கிலாந்து வீரர்களின் மனதை பாராட்டிய – ரவிச்சந்திரன் அஷ்வின்
“பர்மிங்காம் தோல்வியால் அவர்களுடைய பேட்டிங், பவுலிங், கேப்டன்ஷிப் ஆகிய அனைத்திலும் கேள்விகள் எழுந்தன. ஆனால் இந்த குறிப்பிட்ட நிகழ்வு ஸ்டோக்ஸை சூடேற்றி நீண்ட நேரம் பவுலிங் செய்ய வைத்தது. எனவே உங்களுக்கு எந்த அணுகுமுறை பொருந்துகிறது என்பதைக் கண்டறிந்து கடைபிடிப்பது புத்திசாலித்தனம். கில் அதை கடினமான வழியில் கற்றுக் கொள்வார்” என்று கூறினார்.