ஐசிசி 2026 டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து கடைசி நேரத்தில் துணைக் கேப்டன் சுப்மன் கில் கழற்றி விடப்பட்டார். ஏனெனில் கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 போட்டிகளில் அரை சதம் கூட அடிக்க முடியாமல் தடுமாறிய அவர் மோசமான ஃபார்மில் இருக்கிறார். இருப்பினும் துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் உலகக் கோப்பையில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அணியை விட யாரும் முக்கியமில்லை என்ற கருதிய தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் அவரை கழற்றி விட்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்நிலையில் சுப்மன் கில்லை டி20 கேப்டனாக வளர்க்கும் தேர்வுக்குழுவின் திட்டம் தோல்வியடைந்துள்ளதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் விமர்சித்துள்ளார். அதனால் அவரை வைத்து நேரத்தை வீணடித்ததற்கு பதிலாக ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பளித்து வளர்த்திருக்கலாம் என்றும் அவர் விமர்சித்துள்ளார்.
வீணடித்த அகர்கர்:
இது பற்றி கைஃப் பேசியது பின்வருமாறு. “சுப்மன் கில்லை தாங்கிய நீங்கள் கடைசியில் கழற்றி விட்டுள்ளீர்கள். இது தாமதமாக எடுக்கப்பட்ட சரியான முடிவு என்று நான் நினைக்கிறேன். ஆனால் உங்களிடம் எந்த திட்டமும் இல்லை. இது திட்டம் என்ற பெயரில் நேரத்தை வீணடித்துள்ள செயலாகும். ஏனெனில் நீங்கள் பொறுப்புக்கு தயாராக இல்லாத ஒரு வீரருக்கு
ஆதரவளித்துள்ளீர்கள்”
“அவரை விட இங்கே தகுதியான நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். எனவே இது தேர்வாளர்களாக நீங்கள் செய்த தவறு. கடைசியில் உங்களுக்கு வேறு வாய்ப்பில்லை என்பதால் கில்லை கழற்றி விட்டுள்ளீர்கள். இது போன்ற முடிவு அரிதாகவே நடக்கும். 17 – 18 போட்டிகளில் ரன்கள் அடிக்கவில்லை என்றதும் அவரை கழற்றி விடுவதைத் தவிர்த்து உங்களுக்கு வேறு வாய்ப்பில்லை”
கைஃப் விமர்சனம்:
“அப்படியானால் எதற்கு நீங்கள் அவருக்கு அவ்வளவு வாய்ப்பு கொடுத்தீர்கள்? இதற்கு முன் அவரை நீஙகள் நீக்க விரும்பவில்லை. எனவே இது இந்திய கிரிக்கெட்டில் நேரத்தை வீணடித்த செயலாகவே நான் பார்க்கிறேன். இந்த காலங்களில் நிறைய வீரர்கள் வாய்ப்புக்காக காத்திருந்தனர். இத்தனைக்கும் நம்முடைய தேர்வாளர்களுக்கு டி20 கிரிக்கெட்டில் அசத்தக்கூடிய சிறந்த வீரர்கள் பற்றி தெரியும்”
இதையும் படிங்க: 49 பந்துகள் மீதம்.. 11.5 ஓவரில் 129.. இலங்கைக்கு எதிராக இந்திய மகளிரணி சாதனை வெற்றி
“இங்கே கில்லை விட நிறைய வீரர்கள் இருக்கிறார்கள். எனவே இது கண்டிப்பாக தேர்வாளர்கள் செய்த தவறாகும். அவர்கள் இந்திய அணி பின்னோக்கிச் செல்லக்கூடிய ஒரு தவறை செய்துள்ளார்கள். அதற்காக நீங்கள் எடுத்துக்கொண்ட 2 – 3 மாதங்களில் ஜெய்ஸ்வால், சாம்சன், ஜிதேஷ் ஆகியோருக்கு வாய்ப்பைக் கொடுத்திருக்கலாம். அத்துடன் ஏற்கனவே துணைக் கேப்டனாக இருந்த அக்சர் பட்டேல் கடந்த 2 – 3 மாதங்களில் நிறைய அனுபவத்தைப் பெற்றிருப்பார்” என்று கூறினார்.



