இந்திய கிரிக்கெட் அணியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு தற்சமயத்தில் வாய்ப்பு கொடுக்கப்படாதது பல ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக 2024 ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா கேப்டனாக வென்ற அவர் 2025 சீசனில் பஞ்சாப்பை 14 வருடங்கள் கழித்து இறுதி போட்டிக்கு அழைத்துச் சென்றார். அத்தொடரில் 600+ ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவருக்கு 2025 ஆசியக் கோப்பையில் இடம் கிடைக்கவில்லை.
இத்தனைக்கும் ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராஃபியில் அதிக ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். அதனால் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அவருக்கு ஆசியக் கோப்பையில் பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. அதன் காரணமாக நிறைய முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தேர்வுக்குழுவை விமர்சித்தனர்.
வளமான எதிர்காலம்:
அதனால் அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் துணைக் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவரை முன்னாள் இந்திய வீரர் முகமது ஃகைப் சந்தித்ததாக தெரிகிறது. அது பற்றிய புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டரில் பகிர்ந்துள்ள முகமது ஃகைப் உங்களுக்கு வளமான எதிர்காலம் இருக்கிறது என்று ஸ்ரேயாஸ் ஐயரை பாராட்டியுள்ளார்.
இது பற்றி எக்ஸ் எனப்படும் ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “ஸ்ரேயாஸ் ஐயருடன் சிறந்த சந்திப்பு. அவர் என்ன ஒரு பிளேயர். தன்னுடைய அறிமுக டெஸ்ட் போட்டியில் சதத்தை அடித்த அவர் 2023 உலகக் கோப்பையின் ஹீரோ. 3 வெவ்வேறு விதமான ஐபிஎல் அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஒரே கேப்டன்”
வாழ்த்திய ஃகைப்:
“விரைவில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக விளையாடும் வாய்ப்பு வரும். அதற்காக அங்கேயே இருங்கள் ஸ்ரேயாஸ், உங்களுக்கு வளமான எதிர்காலம் காத்திருக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். அவர் கூறுவது போல 2023 உலகக்கோப்பையில் 4வது இடத்தில் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயர் 500+ ரன்கள் குவித்த இந்தியா ஃபைனல் செல்ல முக்கிய பங்காற்றினார்.
இதையும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டை காப்பாற்றிய சேவாக்.. கில்கிறிஸ்ட், அப்ரிடியை விட பெஸ்ட்.. ரிச்சர்ட்ஸ் பாராட்டுக்கு சேவாக் பதில்
அதன் வாயிலாக ஒரு உலகக் கோப்பையில் 4வது இடத்தில் களமிறங்கி 500 ரன்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். மேலும் டெல்லி (2020), கொல்கத்தா (2024), பஞ்சாப் (2025) என 3 வெவ்வேறு அணிகளை அவர் ஐபிஎல் ஃபைனலுக்கு கேப்டனாக அழைத்துச் சென்றார். 2021ஆம் ஆண்டு கான்பூரில் நியூசிலாந்துக்கு எதிராக தனது அறிமுகப் போட்டியிலேயே அவர் சதத்தை அடித்தது குறிப்பிடத்தக்கது.



