
இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்கள் விராட் கோலி, ரோஹித் சர்மா டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்டார்கள். இனிமேல் ஒருநாள் கிரிக்கெட்டில் மட்டுமே விளையாட உள்ள அவர்கள் 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற விரும்புகின்றனர். அதற்கு முன் வயதைக் காரணமாக வைத்து அவர்களை கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகிறது.
எனவே அதை முறியடித்து உலகக் கோப்பையில் விளையாட வேண்டுமெனில் அவர்கள் தொடர்ச்சியாக விளையாடி தங்களை ஃபிட்டாக வைத்துக் கொள்வது அவசியமாகிறது. இப்போதெல்லாம் ஒருநாள் போட்டிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. எனவே 2 மாதங்களுக்கும் மேல் நடைபெற உள்ள ஐபிஎல் தொடர் தான் விராட், ரோஹித் ஆகியோருக்கு ஃபார்ம் மற்றும் ஃபிட்னெஸை சோதிக்க சிறந்த இடமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் தொடரில் ரோஹித் சர்மா தன்னுடைய கேப்டன்ஷிப் மற்றும் அனுபவத்தால் மட்டுமே மதிப்பைப் பெறுவதாக முன்னாள் வீரர் முகமது ஃகைப் தெரிவித்துள்ளார். ஆனால் சாதாரண பேட்ஸ்மேனாக அவர் விராட் கோலி போல ஒரே சீசனில் 700 – 800 ரன்கள் அடித்ததில்லை என்றும் ஃகைப் தெரிவித்துள்ளார். எனவே தற்போது கேப்டனாக இல்லாத ரோஹித் தம்முடைய மதிப்பை தக்க வைத்துக்கொள்ள 2026 சீசனில் 600 – 700 போன்ற பெரிய ஸ்கோர் அடிப்பதைக் குறிக்கோளாக வைத்திருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி ஃகைப் பேசியது பின்வருமாறு. “மும்பை அணியில் நாம் ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் பற்றி பேசுகிறோம். ஆனால் ரோஹித் சர்மா எப்போதுமே ஒரு ஐபிஎல் தொடரில் 700 – 800 ரன்கள் அடித்ததில்லை. ஐபிஎல் தொடரில் ரோஹித் தன்னுடைய கேப்டன்ஷிப் மற்றும் அனுபவத்தை வைத்து புள்ளிகளைப் பெறுகிறார்”
“ஆனால் அவரை நீங்கள் விராட் கோலி அல்லது மற்ற பேட்ஸ்மேன்களுடன் ஒப்பிடும் போது ரோகித் 600 – 700 ரன்கள் அடித்ததில்லை. பெரும்பாலான சீசன்களில் அவர் ஓரிரு போட்டிகளில் மட்டுமே பெரிய ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதுகளை வெல்வார். எனவே இம்முறை 500 – 600 ரன்கள் அடிக்க முடியுமா என்பதே அவருக்கு காத்திருக்கும் மிகப்பெரிய சோதனையாக இருக்கும்”
இதையும் படிங்க: இந்திய கேப்டன் ஸ்ரீகாந்த்தை அடிக்க வந்த.. பாகிஸ்தான் ரசிகரை மோர் உதைச்சாரு.. 1989 சண்டை பற்றி மஞ்ரேக்கர்
“கடந்த சீசனில் சாய் சுதர்சன் 750 ரன்கள் அடித்துள்ளார். எனவே அவரை விட மூத்தவரான ரோஹித் இம்முறை 600 ரன்கள் அடிக்க விரும்புவார். ஏனெனில் தற்போது ஃபிட்டாக மாறியுள்ள அவர் நல்ல ஃபார்மிலும் இருக்கிறார். அதனால் 2026 ஐபிஎல் தொடரில் அவர் ரன்களுக்காக பசியுடன் காத்திருப்பார்” என்று கூறினார். வரலாற்றில் ரோஹித் சர்மா அதிகபட்சமாக 2013 ஐபிஎல் சீசனில் 538 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.