தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடைபெறும் டி20 கிரிக்கெட் தொடரில் 3 போட்டிகளின் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக 3வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது. அப்போட்டியில் 118 இலக்கைத் துரத்திய இந்தியாவுக்கு அபிஷேக் 35, சுப்மன் கில் 28, திலக் வர்மா 25*, கேப்டன் சூரியகுமார் 12 ரன்கள் எடுத்து வெற்றி பெற உதவினர்.
முன்னதாக மோசமான ஃபார்மில் இருக்கும் கேப்டன் சூரியகுமார் 3வது போட்டியில் 3வது இடத்தில் விளையாடியிருந்தால் ஃபார்முக்கு வந்திருக்க முடியும் என்று முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். ஆனால் பெவிலியனில் ஒளிந்து கொண்ட சூரியகுமார் அதை செய்யவில்லை என்று அவர் விமர்சித்துள்ளார். எனவே அடுத்த போட்டியிலாவது தைரியத்துடன் கொஞ்சம் முன்னதாக விளையாடி ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்று அவரை ஃகைப் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒளிந்தால் எப்படி:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இன்று சூரியகுமாருக்கு 3வது இடத்தில் விளையாடுவதற்கான வாய்ப்பிருந்தது. அங்கே அவருக்கு களத்தில் கொஞ்சம் நேரத்தை செலவிட்டு 30 – 40 ரன்கள் குவித்து அவுட்டாகாமல் இருப்பதற்கான வாய்ப்பிருந்தது. அதைச் செய்வது அவருக்கு அடுத்து வரும் போட்டிகளுக்கு நல்ல நிலையைக் கொடுக்கும்”
“திடமான வீரரான அவருடைய பேட்டிங் திறமையைப் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. கேள்வியே அவருடைய ஃபார்ம் பற்றியதாகும். இப்போட்டியில் அவருக்கு கணிசமான ரன்கள் குவித்து நாக் அவுட்டாக நிற்க வாய்ப்பிருந்தது. அது அவருக்கு டி20 உலகக் கோப்பைக்கு முந்தைய போட்டிகளில் நல்லதாக இருக்கும். ஏனெனில் ஒரு நல்ல இன்னிங்ஸ் அவரைப் போன்ற வீரரை முற்றிலும் மாறுபட்ட வீரராக மாற்றும்”
ஃபார்முக்கு வரமுடியும்:
“திலக் வர்மா 3வது இடத்தில் விளையாட அனுப்பப்பட்ட போது கேமராக்கள் சூரியகுமாரை காண்பித்தன உங்களிடம் தன்னம்பிக்கை குறைவாக இருக்கும் போது பேட்டிங் செய்ய செல்லலாமா வேண்டாமா என்ற எண்ணங்கள் தோன்றும். அப்போது தான் நீங்கள் தைரியத்துடன் இருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் கம்பேக் கொடுக்க விரும்பினால் பெவிலியனுக்கு சென்று ஒளியக்கூடாது. சவால்களை எதிர்கொள்ள வேண்டும்”
இதையும் படிங்க: 2009இல் 3 ஸ்டேன்ஸ்.. சச்சின் சச்சின் தான் ப்ரோ.. தோனி, யுவ்ராஜால் முடியாததை செஞ்சாரு.. முரளி விஜய்
“கடந்த காலங்களில் அதை செய்துள்ள சூரியகுமாருக்கு 3வது டி20 போட்டியில் ஃபார்முக்கு வர நல்ல வாய்ப்பிருந்தது. 4வது இடத்தில் அவர் விளையாட வந்த போது அடிப்பதற்கு ரன்கள் குறைவாக இருந்தது. ஒருவேளை அவர் 3வது இடத்தில் விளையாடியிருந்தால் குறைந்தது 40 ரன்கள் அடிப்பதற்கான வாய்ப்பிருந்தது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து 4வது போட்டி லக்னோவில் டிசம்பர் 17ஆம் தேதி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.



