
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்தத் தொடரின் முதல் போட்டியில் வென்ற இந்தியாவை இரண்டாவது போட்டியில் தோற்கடித்த ஆஸ்திரேலியா பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்துள்ளது. அதனால் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு செல்ல அடுத்து வரும் போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.
ஆனால் 2வது போட்டியில் இரண்டரை நாட்களில் இந்தியா தோல்வியை சந்தித்த விதத்தால் மீண்டும் கம்பேக் கொடுத்து வெல்ல முடியுமா என்ற சந்தேகம் ரசிகர்களிடம் காணப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி போல இந்தியாவுக்கு எப்போதுமே சவாலை கொடுக்கும் டிராவிஸ் ஹெட்டும் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் பலவீனத்தைக் கொண்டிருப்பதாக முகமது கைஃப் தெரிவித்துள்ளார்.
எனவே அந்த இடத்தில் தொடர்ச்சியாக பந்து வீசினால் கண்டிப்பாக அவரை எளிதாக வீழ்த்த முடியும் என்று ஃகைப் ஆலோசனை தெரிவித்துள்ளார். அத்துடன் இங்கிருந்து இந்தியா வெல்ல முடியாது என்று பயப்படும் அளவுக்கு ஆஸ்திரேலியா ஒன்றும் அவ்வளவு பலமான அணி கிடையாது என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி தனது ட்விட்டரில் ஃகைப் பேசியுள்ளது பின்வருமாறு.
“ஸ்காட் போலண்ட் ஆஸ்திரேலிய அணிக்காக தொடர்ச்சியாக விளையாடுவதில்லை. அப்படி இருந்தும் கிடைக்கும் வாய்ப்பில் எப்படி எதிரணியை வீழ்த்த முடியும் என்பதை அவர் தெரிந்து வைத்துள்ளார். அப்படிப்பட்ட நிலையில் நம்மால் ஏன் டிராவிஸ் ஹெட்டை வலையில் விழ வைக்க முடியாது? அவருடைய பலவீனம் அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப் என்றால் நாம் ஏன் அங்கு தொடர்ச்சியாக பந்து வீசக்கூடாது? ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் பலவீனம் இருக்கும்”
“சுமாரான பவுலர்கள் கூட அவுட் சைட் ஆஃப் ஸ்டம்ப்பில் பந்து வீசினால் விராட் கோலியை அவுட்டாக்க முடியும் என்பதை தெரிந்து வைத்திருக்கிறார்கள். எனவே அதே போன்ற யுக்தியை நீங்கள் டிராவிஸ் ஹெட்டுக்கு எதிராக பயன்படுத்த வேண்டும். தரமான திட்டத்துடன் முதல் பந்திலிருந்தே அவருடைய பலவீனத்தை தாக்கினால் விக்கெட்டை எடுக்க முடியும். அதை செய்யாமல் நாம் தவறு செய்கிறோம்”
இதையும் படிங்க: வெறும் 34% ஆடும் பும்ரா.. நாட்டுக்காக ஆஸியில் இதை கூட செய்யலன்னா எப்படி? சஞ்சய் மஞ்ரேக்கர் அறிவுரை
“நாம் பயப்படும் அளவுக்கு இந்த ஆஸ்திரேலிய அணி அவ்வளவு வலுவானது என்று நான் நம்பவில்லை. நாம் முதல் போட்டியில் வென்றோம். ஆஸ்திரேலியா நன்றாக விளையாடியதால் இரண்டாவது போட்டியில் வென்றார்கள். அதனால் 1 – 1 என்ற கணக்கில் தொடர் சமனில் இருக்கிறது. நம்முடைய இந்திய அணி வலுவானது. எனவே காபாவுக்கு சென்று 3வது போட்டியில் விளையாடும் போது நம்மால் கம்பேக் கொடுக்க முடியும்” எனக் கூறினார்.