மும்பையைச் சேர்ந்த நட்சத்திர கிரிக்கெட் வீரர் சூரியகுமார் யாதவ் உள்ளூர் மற்றும் ஐபிஎல் தொடரில் கடினமாக போராடி கடந்த 2021இல் ஒரு வழியாக இந்தியாவுக்காக சர்வதேச அரங்கில் அறிமுகமானார். குறிப்பாக தாமதமாக 30 வயதில் அறிமுகமான அவர் அதனாலேயே தமக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்காமல் டி20 கிரிக்கெட்டில் பெரும்பாலான போட்டிகளில் சூழ்நிலை எதுவாக இருந்தாலும் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே மைதானத்தின் நாலாபுறங்களிலும் அதிரடியாக விளையாடி பெரிய ரன்களை குவித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து லேட்டஸ்ட் மேட்ச் வின்னராக உருவெடுத்தார்.
மேலும் எப்படி போட்டாலும் அடிக்கிறார் என்ற வகையில் கற்பனை செய்ய முடியாத வித்தியாசமான ஷாட்டுகளால் பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் பறக்க விட்ட அவரை இந்தியாவின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் என்று ரசிகர்களும் முன்னாள் வீரர்களும் கொண்டாடுகிறார்கள். அப்படி சரவெடியாக விளையாடிய அவர் அதற்குள் டி20 கிரிக்கெட்டில் 3 சதங்கள் அடித்து பாகிஸ்தானை சேர்ந்த பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் ஆகியோரையும் மிஞ்சி ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக முன்னேறி இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.
தமக்கு தாமே ஒப்பீடு:
அத்துடன் 2022ஆம் ஆண்டின் சிறந்த டி20 வீரர் என்ற ஐசிசி விருதை வென்ற அவர் உலக அளவில் மிகச்சிறந்த டி20 பேட்ஸ்மேன் என்ற இங்கிலாந்தின் விஸ்டன் பத்திரிகையின் விருதையும் வென்றார். சொல்லப்போனால் இப்போதே சில சமயங்களில் தம்மை மிஞ்சும் நீங்கள் ஓய்வு பெறுவதற்குள் உச்சத்தை தொடுவீர்கள் என்று உண்மையான மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேன் ஏபி டீ வில்லியர்ஸ் பாராட்டுகளையும் சூரியகுமார் கடந்த காலங்களில் பெற்றார்.
இந்நிலையில் 32 வயதாகும் சூரியகுமார் போல 22 வயதிலேயே தம்மால் பாகிஸ்தான் அணியின் மிஸ்டர் 360 டிகிரி பேட்ஸ்மேனாக செயல்பட முடியும் என்று அந்நாட்டை சேர்ந்த இளம் வீரர் முகமது ஹாரிஸ் அதிரடியாக பேசியுள்ளார். இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் வெறும் 27 ரன்களையும் 9 டி20 போட்டிகளில் வெறும் 126 ரன்களையும் மட்டுமே எடுத்து சுமாராக செயல்பட்டுள்ள அவர் தற்போது இலங்கையில் நடைபெறும் வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் ஏ அணிக்காக விளையாடி வருகிறார்.
அத்துடன் 360 டிகிரியில் பேட்டிங் செய்ததற்கான எந்தவிதமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் கிடைக்காத நிலையில் கடினமாக பயிற்சிகளை எடுத்து சூரியகுமார் மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் ஆகியோருக்கு நிகராக வருங்காலங்களில் செயல்படுவேன் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு. “இப்போதே எங்கள் இருவரையும் நான் ஒப்பிட விரும்பவில்லை. ஏனெனில் சூர்யா 32 – 33 வயதில் இருக்கிறார். மறுபுறம் நான் வெறும் 22 வயது பையன். எனவே அந்த உச்சத்தை தொடுவதற்கு நான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்”
“அதே சமயம் சூர்யா தன்னுடைய அளவில் அசத்துகிறார். ஏபி டீ வில்லியர்ஸ் தனக்கென்று ஒரு அளவையும் தரத்தையும் கொண்டுள்ளார். அவர்களைப் போல நானும் 360 டிகிரி பேட்ஸ்மேன் என எனக்கென்று ஒரு பெயரை உருவாக்க விரும்புகிறேன். அதனால் அவர்களின் பெயர்களை நான் பயன்படுத்த விரும்பவில்லை” என்று கூறினார். இருப்பினும் இதுவரை அனைவரும் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு ஒரு போட்டியில் கூட அசத்தாத இவர் இந்த வயதிலேயே சூரியகுமார் யாதவ், டீ வில்லியர்ஸ் போன்ற சாதித்த நட்சத்திர வீரர்களுடன் தம்மை இப்படி ஒப்பிட்டு பேசுவது வேடிக்கையாக இருக்கிறது என்றே சொல்லலாம்.
இதையும் படிங்க:ஆசிய கோப்பை அட்டவணை வெளியாகும் தேதி, நேரத்தை அறிவித்த பாக் வாரியம் – இந்தியாவின் போட்டிகள் பற்றிய விவரம் இதோ
இந்த நிலைமையில் இலங்கையில் நடைபெற்று வரும் அந்த ஆசிய கோப்பையில் தங்களுடைய முதலிரண்டு போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஏ அணிகள் ஜூலை 17ஆம் தேதியான இன்று நடைபெறும் கடைசி லீக் போட்டியில் நேருக்கு நேர் மோதுகின்றன. அதில் இந்தியாவுக்கு எதிராக அசத்துவதற்கு முகமது ஹாரிஸ் தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.