இனி குட்டி சச்சினின் அதிர்ஷ்டம் மட்டுமே மும்பையை காப்பாற்ற முடியும் – சான்ஸ் கொடுங்க ! முன்னாள் இந்திய கேப்டன் கருத்து

- Advertisement -

மிகுந்த பரபரப்புடன் நடைபெற்று வரும் ஐபிஎல் 2022 தொடர் வெற்றிகரமான 3-வது வாரத்தை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மும்பை நகரில் பல பரபரப்பான திரில்லர் தருணங்களுடன் நடைபெற்று வரும் இந்த தொடரில் இதுவரை 27 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான ஐபிஎல் அணி என பெயரெடுத்த ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் இதுவரை பங்கேற்ற 6 போட்டிகளிலும் ஒரு வெற்றியைக் கூட பதிவு செய்ய முடியாமல் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் திண்டாடுவது அந்த அணி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Mumbai Indians MI

- Advertisement -

கடந்த வருடம் வரை எதிரணிகளை அலறவிடும் ஒரு மிரட்டலான அணியாக செயல்பட்டு வந்த மும்பை சமீபத்தில் நடந்த ஏலத்தின் போது ஹர்திக் பாண்டியா, க்ருனால் பாண்டியா, ட்ரெண்ட் போல்ட் போன்ற ஒரு சில முக்கியமான வீரர்களை இழந்தது. அதன் காரணமாக பலவீனம் அடைந்துள்ள அந்த அணி குறிப்பாக பந்துவீச்சில் வரலாற்றில் இல்லாத அளவுக்கு படுமோசமான கூட்டணியை பெற்றுள்ளது. ஏனெனில் நட்சத்திர வீரர் ஜஸ்பிரித் பும்ரா மட்டும் ஒவ்வொரு போட்டியிலும் துல்லியமாக பந்துவீசி தனி ஒருவனாக வெற்றிக்கு போராடுகையில் அவருடன் விளையாடும் டைமல் மில்ஸ், உனட்கட், டேனியல் சாம்ஸ் போன்ற பவுலர்கள் ரன்களை வாரி வழங்கும் வள்ளல்களாக இருந்து வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி வருகிறது.

வெளியேறிய மும்பை:
சரி பவுலின் தான் மோசம் என்றால் அதை மூடி மறைக்கும் வகையில் சிறப்பாக செயல்பட்டு பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிப்பார்கள் என்று பார்த்தால் சூரியகுமார் மற்றும் இளம் வீரர் தேவால்டு ப்ரேவிஸ் ஆகியோரை தவிர அந்த அணியின் முக்கிய முதுகெலும்பு வீரர்களாக கருதப்படும் இஷான் கிசான், கைரன் பொல்லார்ட் போன்ற வீரர்களின் பேட்டிலிருந்து பெரிய அளவில் தொடர்ச்சியாக ரன்கள் வருவதில்லை. குறிப்பாக அதன் கேப்டன் ரோகித் சர்மா 30 ரன்களைக் கூட தாண்ட முடியாமல் படுமோசமான பார்மில் திண்டாடி வருகிறார்.

RCB vs MI Rohit Sharma

இப்படி மோசமான பேட்டிங் மற்றும் பவுலிங்கை வைத்துக்கொண்டு அந்த அணி வெற்றி பாதைக்கு திரும்பினாலும் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் ஏற்கனவே தனது 14 போட்டிகளில் 6 தோல்விகளை பெற்ற அந்த அணி இனிவரும் அடுத்த 8 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றாலும்கூட பிளே-ஆப் சுற்றுக்கு செல்வதற்கு 90% வாய்ப்பில்லை என்று நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் தொடரின் லீக் சுற்றோடு நடையை கட்டும் முதல் அணியாக பரிதாப நிலைக்கு மும்பை தள்ளப்பட்டுள்ளது.

- Advertisement -

குட்டி சச்சினுக்கு வாய்ப்பு:
இந்நிலையில் அடுத்தடுத்த தோல்விகளுக்கு காரணமாக விளங்கும் மோசமான மும்பை பந்துவீச்சை சரிசெய்ய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கருக்கு மும்பை அணி நிர்வாகம் வாய்ப்பளிக்க நேரம் வந்துவிட்டதாக முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாருதீன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நீங்கள் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். குறிப்பாக அர்ஜுன் போன்றவர்களுக்கு வாய்ப்பு அளிக்கலாம். ஏனெனில் டெண்டுல்கர் எனும் பெயரைப் பெற்றுள்ள அவர் மும்பை அணிக்குள் வந்தால் அதோடு வெற்றிக்கான அதிர்ஷ்டமும் சேர்ந்து வரலாம். டிம் டேவிட்டை அவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கிய நீங்கள் அவரை பிளேயிங் லெவலில் சேர்க்கவில்லை எனில் அவரால் எந்த பயனுமில்லை. அதேசமயம் அவருடன் இதர இளம் வீரர்களையும் பெஞ்சில் அமர வைப்பதும் சரியான முடிவல்ல. இது இதர வீரர்களுக்கு நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு சாதகமாக எதுவுமே நடக்கவில்லையெனில் இதுவரை எதிரணிகள் விளையாடாத வீரர்களுக்கு வாய்ப்பளித்தால் வெற்றி பெறலாம்” என கூறினார்.

Azhar

அதிர்ஷ்டமான அர்ஜுன்:
இந்தியாவிற்கு தனது அபார திறமையால் பல வெற்றிகளை தனி ஒருவனாக தேடிக் கொடுத்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் ஒரே மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு இடது கை வேகப்பந்து வீச்சாளராக வளர்ந்து வருகிறார். ஆரம்ப காலங்களில் மும்பை இந்தியன்ஸ் அணியில் நெட் பந்துவீச்சாளராக இருந்த அவரை அதன் பின் நேரடியாகவே ஏலத்தில் அந்த அணி நிர்வாகம் வாங்கியது.

இருப்பினும் சச்சின் போன்ற ஒரு மிகப்பெரிய நட்சத்திர வீரரின் மகன் என்பதால் உடனடியாக வாய்ப்பு கொடுத்தால் அது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தும் என்ற காரணத்திற்காக அவரை அந்த அணி நிர்வாகம் தொடர்ந்து பெஞ்சில் அமர வைத்திருக்கிறது.

Arjun-Tendulkar

இருப்பினும் அவருக்கு வாய்ப்பு கொடுப்பதற்கு இதைவிட ஒரு மிகச் சிறந்த தருணம் இருக்க முடியாது என கூறியுள்ள முகமது அசாருதீன் சச்சினை போல அவரின் மகனும் மும்பைக்காக விளையாடினால் வெற்றிப் பாதைக்கு திரும்ப அவரின் அதிர்ஷ்டமே போதும் என தெரிவித்துள்ளார். மேலும் பந்துவீச்சில் தனி ஒருவனாக போராடும் பும்ராவும் மனிதன் தான் என குறிப்பிட்டுள்ள அவர் அவரால் மட்டும் எப்படி தனியாக வெற்றியை தேடித் தர முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே அவருக்கு உதவியாக அர்ஜுன் டெண்டுல்கர் விளையாடினால் மும்பை வெற்றிப் பாதைக்கு திரும்பலாம் என முகமது அசாருதீன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement