ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி செப்டம்பர் 14ஆம் தேதி துபாயில் நடைபெற்றது. அப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியை இந்தியா எளிதாக வீழ்த்தியது. ஆனால் அப்போட்டியின் முடிவில் கை கொடுக்க வந்த பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்காமல் வெளியேறியது சர்ச்சையை உண்டாக்கியது.
சில மாதங்களுக்கு முன்பாக காஷ்மீரில் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்திய சுற்றுலாப் பயணிகள் இயற்கை எய்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அப்போட்டியில் டாஸ் வீசிய பின் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகாவுக்கு இந்திய கேப்டன் சூரியகுமார் கை கொடுக்கவில்லை. மேலும் போட்டியின் முடிவில் ஜென்டில்மேனாக கை கொடுக்க வந்த பாகிஸ்தான் அணியினருக்கு கைகுலுக்காமல் இந்திய அணி வெளியேறியது.
சிறந்த விராட் கோலி:
அதனால் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் இந்திய அணியை கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக சூரியகுமாரை பன்றிகுமார் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசுப் விமர்சித்தது மற்றொரு சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் விராட் கோலி இந்திய கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வீரர் மற்றும் மனிதர் என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது அமீர் பாராட்டியுள்ளார்.
ஏனெனில் கடந்த காலங்களிலும் இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லைப் பதற்றம் நிலவியது. அப்போதும் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஐசிசி மற்றும் ஆசிய கோப்பையில் மோதின. ஆனால் அப்போதெல்லாம் தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் பாகிஸ்தான் வீரர்களிடம் கை கொடுக்காமல் சென்றதில்லை என்று அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தெரிவிக்கின்றனர்.
அமீர் பாராட்டு:
அந்த வகையில் விராட் கோலி தம்மிடம் பகைமையை மறந்து களத்தில் நண்பராக நடந்து கொண்டதாக அமீர் தெரிவித்துள்ளார். அதற்கு ஆதாரமாக ஒருமுறை விராட் கோலி தம்முடைய பேட்டை பார்க்க தன்னிடம் கொடுத்த புகைப்படத்தையும் அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். இது பற்றி அமீர் தெரிவித்துள்ளது பின்வருமாறு.
இதையும் படிங்க: 24க்கு 20 வெற்றி.. அணியில் 2 மாற்றம் செய்த சூரியகுமார்.. ரோஹித்துக்கு பதில் சரியான கேப்டன்.. ஃகைப் பாராட்டு
“ஒரு விஷயம் மட்டும் உறுதி. இந்திய கிரிக்கெட்டின் வரலாற்றில் விராட் மிகவும் சிறந்த பிளேயர் மற்றும் மனிதாபிமானம் மிக்கவர். அவரை மதிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார். அவருடையப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர் கூறுவது போல பாகிஸ்தானை பலமுறை வெளுத்து வாங்கிய விராட் கோலி தோல்வியை பரிசளித்து இந்தியாவை வெற்றி பெற வைத்துள்ளார். இருப்பினும் எப்போதும் அவர் பாகிஸ்தான் வீரர்களிடம் நட்பாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.



