
ஆசியக் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்யாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் பாகிஸ்தானை 3வது முறையாக சாய்த்த இந்தியா 9வது ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்தது. இந்நிலையில் அந்தப் போட்டியில் பாகிஸ்தான் தங்களிடமிருந்த வெற்றியை தட்டில் வைத்து இந்தியாவுக்கு தாரை வார்த்ததாக முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சித்துள்ளார்.
ஏனெனில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் 113/1 என்ற வலுவான நிலையில் இருந்தது. ஆனால் மிடில் ஆடரில் வந்த பேட்ஸ்மேன்கள் அனைவரும் முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்க முயற்சித்தது பாகிஸ்தான் 146க்கு அவுட்டாக காரணமானதாக அமீர் தெரிவித்துள்ளார். அங்கேயே ஆசியக் கோப்பையை பாகிஸ்தான் அணி இந்தியாவுக்கு கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அதே போல 20/3 என இந்தியா தடுமாறிய போது சாம்சன், சிவம் துபே ஆகியோருடன் இணைந்து நங்கூரமாக விளையாடிய திலக் வர்மா நன்கு செட்டிலாகி வெற்றி பெற வைத்ததாகவும் அமீர் பாராட்டியுள்ளார். அதைப் பார்த்து பாகிஸ்தான் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கும் அமீர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “இது நம்ப முடியாததாக இருக்கிறது. என்ன நடந்தது என்பதை இன்னும் என்னால் கச்சிதமாக புரிந்து கொள்ள முடியவில்லை”
“அது 2024 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக நாம் தோற்றது போன்ற உணர்வைக் கொடுத்தது. அது வெற்றியைத் தட்டில் வைத்து கொடுத்தது போல் அமைந்தது. நாம் மிகப்பெரிய வாய்ப்பை தவற விட்டு விட்டோம். நாம் அப்போட்டியை வென்றிருக்க முடியும். நம்முடைய திட்டம் தெளிவாக இல்லை. புதிய பேட்ஸ்மேன் வந்ததும் செட்டிலாகுவதற்கு பதில் உடனடியாக அடிக்கப் பார்த்தார்”
“இத்தனைக்கும் அது முதல் போட்டி கிடையாது. நாம் முதல் 10 ஓவரில் நல்ல ரன்கள் அடித்தோம். ஆனால் கடைசி 10 ஓவர்கள் தந்திரமானது. ஏனெனில் பந்து தேய்ந்ததும் அதே வழியில் பேட்டுக்கு வராது. அது புதிய பேட்ஸ்மேனுக்கு கடினத்தைத் தரும். அது போன்ற நிலையில் செட்டிலான பேட்ஸ்மேனால் மட்டுமே தாக்கத்தை உண்டாக்க முடியும். எடுத்துக்காட்டாக திலக் வர்மாவின் அற்புதமான விழிப்புணர்வைப் பாருங்கள்”
இதையும் படிங்க: மட்டமான இந்தியா கிரிக்கெட்டின் ஜோக்கா மாறிட்டாங்க.. அவங்களோட பாகிஸ்தான் இதை செய்யக்கூடாது.. கம்ரான் அக்மல்
“நம்முடைய வீரர்கள் எப்போது அடிக்க வேண்டும் என்பதை இன்னும் கற்றுக் கொண்டிருக்கின்றனர். திலக் வர்மா பார்ட்னர்ஷிப் அமைத்து தேவைப்படும் போது சிங்கிள் எடுத்து சாதுரியமான கிரிக்கெட்டை விளையாடினார். அப்படித்தான் உங்களால் போட்டியை வெல்ல முடியும். நம்மால் ஃபைனலில் வென்றிருக்க முடியும் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடியும்” என்று கூறினார்.