இந்தியாவில் சயீத் முஷ்டாக் அலி 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் பெங்கால் அணிக்காக நட்சத்திர வீரர் முகமது ஷமி 7 போட்டிகளிலும் முழுமையாக விளையாடினார். அந்த 7 போட்டிகளில் 16 விக்கெட்டுகளை 8.91 என்ற எக்கனாமியில் எடுத்த அவர் ஓரளவு நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
குறிப்பாக சர்வீசஸ், பாண்டிச்சேரி, ஹரியானா ஆகிய அணிகளுக்கு எதிரான கடைசி 3 போட்டிகளில் மட்டும் அவர் 4/13, 3/34, 4/30 என 11 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 2023 உலகக் கோப்பையில் லேசான காயத்துடன் நெருப்பாக பந்து வீசிய ஷமி இந்தியா இறுதிப்போட்டிக்கு செல்ல முக்கிய பங்காற்றினார். அதன் பின் அறுவைசிகிக்சை மேற்கொண்ட அவரால் 2024/25 ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் வரை விளையாட முடியவில்லை.
மீண்டும் பொய்யாக்கிய ஷமி:
ஒரு வழியாக குணமடைந்த அவர் 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் 8 விக்கெட்டுகள் எடுத்து இந்தியா கோப்பையை வெல்ல தம்முடைய பங்காற்றினார். ஆனால் அப்போதிலிருந்து முகமது ஷமி ஃபிட்டாக இல்லை என்று சொல்லி தேர்வுக்குழு கழற்றி விட்டு வருகிறது. இருப்பினும் ரஞ்சிக் கோப்பையில் பெங்கால் அணிக்காக அசத்திய ஷமி தம்முடைய ஃபிட்னஸை நிரூபித்தார்.
அத்துடன் ரஞ்சிக் கோப்பையில் விளையாட ஃபிட்டாக இருக்கும் தம்மால் ஒருநாள் போட்டிகளில் விளையாட முடியாதா? என்றும் ஷமி கேள்வி எழுப்பினார். அதற்கு ஃபிட்டாக இருந்திருந்தால் இந்நேரம் ஷமி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற இந்திய அணியின் விமானத்தில் இருந்திருப்பார் என்று தேர்வுக்குழு அஜித் அகர்கர் தெரிவித்தார். மேலும் அடுத்து வரும் உள்ளூர் போட்டிகளில் ஷமி கதை மாறலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
போராடும் ஷமி:
அந்த சூழ்நிலையில் சயீத் முஸ்தாக் அலி கோப்பையில் 16 விக்கெட்டுகள் எடுத்துள்ள ஷமி தம்முடைய ஃபிட்னஸை நிரூபித்து மீண்டும் அகர்கர் வார்த்தைகளைப் பொய்யாக்கியுள்ளார். அத்துடன் இந்திய அணிக்காக விளையாட தயாராக இருக்கிறேன் என்பதை அவர் மீண்டும் நிரூபித்துள்ளார். குறிப்பாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகின்றது.
இதையும் படிங்க: விராட் ரோஹித் இல்லாத இந்தியாவை வீழ்த்தி தெ.ஆ ஜெய்க்க பிளான் வெச்சிருக்கோம்.. கேப்டன் மார்க்ரம் பேட்டி
அதில் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் பெரும்பாலான போட்டிகளில் சுமாராக பந்து வீசி இந்தியாவுக்கு பின்னடைவைக் கொடுத்தனர். எனவே அவர்களை விட அனுபவமிக்க ஷமிக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தியாவுக்காக அசத்துவார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவிக்கிறார்கள். அதற்கு அகர்கர், கம்பீர் செவி சாய்ப்பார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



