
சர்வதேச டி20 கிரிக்கெட்டின் புதிய உலக சாம்பியனாக இந்தியா சாதனை படைத்துள்ளது. ஏனெனில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்ற ஐசிசி 2024 டி20 உலகக் கோப்பையை ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்றது. அந்தத் தொடரில் ஆரம்பம் முதலே தோல்வியை சந்திக்காமல் அசத்திய இந்தியா இறுதிப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை தோற்கடித்தது.
அதனால் 17 வருடங்கள் கழித்து டி20 உலகக் கோப்பையை வென்ற இந்தியா 10 வருடங்களாக ஐசிசி தொடர்களில் சந்தித்து வந்த தோல்விகளையும் உடைத்துள்ளது. ஆனால் இந்த தொடருடன் நம்பிக்கை நட்சத்திரங்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் சர்வதே டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.
நன்றி சொன்ன ஷமி:
கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக நிறைய வெற்றிகளில் முக்கிய பங்காற்றிய அவர்கள் 35 வயதை கடந்து விட்டதால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளனர். இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஓய்வு பெற்றது தமக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருப்பதாக முகமது ஷமி தெரிவித்துள்ளார். மேலும் ஜாம்பவான்களாக அவர்களுடைய இடத்தை டி20 அணியில் நிரப்புவது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும் என்றும் ஷமி கூறியுள்ளார்.
அத்துடன் வெறும் 10% வீரர்களுக்கு மட்டுமே உலகக் கோப்பையை வெல்லும் அணியில் அதிர்ஷ்டமான இடம் கிடைக்கும் என்று தெரிவிக்கும் ஷமி இது பற்றி பேசியது பின்வருமாறு. “சர்வதேச டி20 கிரிக்கெட்டில் விராட் மற்றும் ரோஹித் சர்மாவிடமிருந்து ஓய்வு முடிவு வந்தது ஏமாற்றமாகும். அவர்கள் கடந்த 15 – 16 வருடங்களாக இந்தியாவுக்காக தொடர்ந்து நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி வெள்ளைப்பந்து கிரிக்கெட்டின் அரசர்கள் என்ற பெயரை பெற்றுள்ளனர்”
“ஆனால் அந்த இருவரும் ஒரே நேரத்தில் ஓய்வை அறிவித்தது ஏமாற்றமாகும். இருப்பினும் இது இயற்கையின் வட்டம். ஒரு வீரர் வெளியேறும் போது மற்றொருவர் உள்ளே வருவார். ஆனாலும் அவர்களுடைய இடத்தை நிரப்புவது இந்தியாவுக்கு சவாலாக இருக்கும். அதே சமயம் உங்களுடைய லட்சியத்தை சாதித்த பின் விடை பெறுவது உணர்ச்சியான தருணமாக இருக்கும்”
இதையும் படிங்க: எல்லாரும் வந்துருங்க.. 2024 டி20 உ.கோ வெற்றிப் பேரணிக்காக ரசிகர்களுக்கு ரோஹித் அழைப்பு.. எங்கே எப்போது?
“இந்தியாவுக்காக போட்டிகளில் வெற்றிகளை பெற்றுக் கொடுத்து சாதனைகளை உடைத்த ரோஹித் மற்றும் விராட் கோலிக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன். ஒரு உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு வாய்ப்பை பெறும் வீரர்கள் அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் 10% வீரர்கள் மட்டுமே தங்களுடைய வாழ்நாளில் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் வகிக்கும் வாய்ப்பை பெறுவார்கள்” என்று கூறினார். அத்துடன் இந்தியாவுக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த வீரர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஷமி வாழ்த்தும் தெரிவித்தார்.