இந்திய கிரிக்கெட் அணியானது அடுத்ததாக இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. ஏற்கனவே 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்த இந்திய அணியானது அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் முனைப்புடன் தற்போது தயாராகி வருகிறது.
3 ஆவது சீனியர் வீரரை நிராகரிக்கும் பி.சி.சி.ஐ :
அந்த வகையில் 2025-27 ஆம் ஆண்டிற்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் முதல் முயற்சியாக இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாட இருக்கிறது. எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி இங்கிலாந்து நாட்டில் துவங்கவுள்ள தொடரில் பங்கேற்க இருக்கும் இந்திய அணி அங்கு 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கும் முன்னர் ஏற்கனவே இரண்டு வீரர்கள் ஓய்வை அறிவித்துள்ளனர். அந்த வகையில் ரோகித் சர்மா தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்த வேளையில் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். இருப்பினும் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அவரது இந்த முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கூறியுள்ளது.
ஏனெனில் ஒரே நேரத்தில் இரண்டு அனுபவ வீரர்கள் இந்திய அணியில் இருந்து வெளியேறினால் அது டெஸ்ட் அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படுத்தும். அதன்காரணமாக விராட் கோலியிடம் அவரது முடிவினை பரிசீலிக்குமாறு பிசிசிஐ வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்நிலையில் ஏற்கனவே இரண்டு வீரர்கள் அணியிலிருந்து வெளியேறியுள்ள வேளையில் தற்போது மூன்றாவதாக சீனியர் வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இந்த இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட வாய்ப்பு இல்லை என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
ஏனெனில் கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் போது காயம் அடைந்த முகமது ஷமி தற்போது தான் ஐபிஎல் தொடரில் மீண்டும் திரும்பியுள்ள வேளையில் அவரது ஃபார்ம் முன்பை போன்று சிறப்பாக இல்லை என்பதன் காரணமாக இங்கிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இருந்தும் அவரை ஓரம் கட்ட பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
இதையும் படிங்க : ஒருவேளை விராட் கோலியின் ரிட்டயர்மென்ட் உறுதியானால் அவரோட இடத்தை நிரப்ப வாய்ப்புள்ள 3 வீரர்கள் – லிஸ்ட் இதோ
அதே வேளையில் அவருக்கு பதிலாக இளம் வேகப்பந்து வீச்சாளர்களான பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோரை டெஸ்ட் அணியில் இணைக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.



