சுப்மன் கில் தலைமையிலான இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியானது அண்மையில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை ஒன்றுக்கு இரண்டு (1-2) என்ற கணக்கில் இழந்தது. இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது அடுத்த இரண்டு போட்டியில் ஏதாவது ஒரு போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி இரண்டு போட்டியிலும் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இந்திய ஒருநாள் அணிக்கு வருண் சக்கரவர்த்தி அவசியம் தேவை : முகமது கைப்
அதுமட்டும் இன்றி இதுவரை இந்திய மண்ணில் ஒருநாள் தொடரினை கைப்பற்றாமல் இருந்த நியூசிலாந்து அணியானது முதல் முறையாக இந்த தொடரை கைப்பற்றியது அவர்களுக்கு மிகப்பெரிய சாதனையாகவும் மாறியது. அதேவேளையில் இந்திய அணி அடைந்த இந்து தோல்வி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது. அதுமட்டுமின்றி 2027 ஒருநாள் தொடருக்கு இந்திய அணி இன்னும் முழுமையாக தயாராகவில்லையோ? என்ற சந்தேகத்தையும் எழுப்பியுள்ளது.
இந்தூர் மைதானத்தில் நடைபெற்று முடிந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி துவக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தாலும் மிடில் ஓவர்களில் எந்த ஒரு பெரிய சரிவையும் சந்திக்காமல் இறுதியில் 337 ரன்களை குவித்தது. இப்படி நியூசிலாந்து அணியின் மிகப்பெரிய ரன் குவிப்பிற்கு இந்திய அணியில் சரியான பந்துவீச்சு காம்பினேஷன் இல்லாதது ஒரு பெரிய காரணமாக பேசப்பட்டது.
குறிப்பாக குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சிறப்பாக செயல்படவில்லை என்கிற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. சுழற்பந்து வீச்சாளர்களால் மிடில் ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாதது பெரிய பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எதிர்வரும் 2027 உலக கோப்பை அணியில் வருண் சக்கரவர்த்தி இடம்பெற வேண்டும் என்றும் அப்போதுதான் இந்திய ஒருநாள் அணியில் இருக்கும் குறைகள் தீரும் என்றும் முன்னாள் இந்திய வீரரான முகமது கைப் தனது கருத்தினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : வருண் சக்கரவர்த்தி ஒருநாள் அணியிலும் இடம்பெற வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர் ஒரு விக்கெட் டேக்கர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
இதையும் படிங்க : நான் ரன் எடுக்கவில்லை என்பது உண்மைதான்.. ஆனா இந்த ஸ்டைலை மாற்றமாட்டேன் – சூரியகுமார் யாதவ் பேட்டி
குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா போன்றவர்களுக்கு மோசமான நாட்கள் இருக்கலாம். ஆனால் வருண் சக்கரவர்த்தியை பொறுத்தவரை மோசமான நாட்கள் என்பது மிகவும் அரிதான ஒன்று. அவரால் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். எனவே அவர் 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரில் இடம் பெற்றால் தான் இந்திய அணியின் பலமும் அதிகரிக்கும் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.



