
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக முள்ளன்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் 214 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கினை துரத்தும் போது முதல் ஓவரிலேயே சுப்மன் கில் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பிறகு மூன்றாவது வீரராக இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் களத்திற்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவ்வேளையில் அக்சர் பட்டேல் அந்த 3 ஆம் இடத்தில் களமிறங்கி 21 பந்துகளை சந்தித்து 21 ரன்கள் மட்டுமே அடித்து ஏமாற்றத்துடன் வெளியேறியிருந்தார். இந்நிலையில் சூரியகுமார் யாதவின் இந்த பேட்டிங் வரிசை மாற்றம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ள முன்னாள் இந்திய வீரர் முகமது கைப் பல சுவாரஸ்யமான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : சூரியகுமார் யாதவ் ஏன் மூன்றாவது இடத்தில் பேட்டிங் வரவில்லை? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருக்கிறது. ஆனால் என்னை பொறுத்தவரை ஒரு கேப்டனாக அவர் பெரிய இலக்கு இருக்கும்போது முன்கூட்டியே வந்து விளையாடி இருக்க வேண்டும்.
ஆனால் பந்து புதிதாக இருந்ததால் அவர் விக்கெட் விழுந்து விடுமோ என்ற பயத்தில் தான் இறங்கவில்லை என்று நினைக்கிறேன். அதுமட்டும் இன்றி பந்து கொஞ்சம் பழையதாக மாறினால் நன்றாக இருக்கும் என்பதனால் தான் அக்சர் பட்டேலை முன் கூட்டியே அனுப்புகிறார்கள்.
ஆனால் ஒரு ஓவருக்கு 11 ரன்கள் என்கிற தேவை என்கிற நிலையில் பந்து பழையதாக மாற வேண்டிய அவசியம் கிடையாது. நீங்கள் வந்தது முதல் அடித்து விளையாடினாலே போதும். சூரியகுமார் யாதவ் போன்ற ஒரு சிறப்பான டி20 பேட்டர் தன்னைத்தானே நம்பி முன்வந்து விளையாட வேண்டும். அந்த முடிவை சூரியகுமார் யாதவ் எடுத்திருக்க வேண்டும்.
இதையும் படிங்க : சுப்மன் கில்லின் பேட்டிங் பார்ம் குறித்த கவலை எங்களுக்கு இல்லை.. காரணத்தை கூறிய – ஆஷிஷ் நெஹ்ரா
ஆனால் அவர் அக்சர் பட்டேலை தனது விக்கெட் விழக்கூடாது என்று நினைத்தே முன்கூட்டியே அனுப்புகிறார். அப்படி போட்டிக்கு போட்டி பேட்டிங் வரிசையை மாற்றுவதும் அவர் பின்னால் களமிறங்குவதும் இந்திய அணிக்கு பாதகமாகவே அமையும் என முகமது கைப் கூறியது குறிப்பிடத்தக்கது.