
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ஷ்ரேயாஸ் ஐயர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 243 ரன்கள் அடித்து தனது அசத்தலான ஆட்டத்தின் மூலம் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியிருந்தார். அதேபோன்று நடைபெற்று முடிந்த 2025 ஐ.பி.எல் தொடரிலும் தனது சிறப்பான பேட்டிங் மற்றும் கேப்டன்சியின் மூலம் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச்சென்று அனைவரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தார்.
அவரது தொடர்ச்சியான சிறப்பான செயல்பாடுகள் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயருக்கு மீண்டும் இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றெல்லாம் பேசப்பட்டு வந்தது. ஆனால் அண்மையில் நடைபெற்று முடிந்த 2025 ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய டி20 அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. இந்த விடயம் அப்போதே பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியிருந்தது.
மேலும் இந்திய கிரிக்கெட் வாரியம் வேண்டுமென்றே ஷ்ரேயாஸ் ஐயரை ஒதுக்குவதாக ரசிகர்களும் குற்றம் சாட்டியிருந்தார்கள். சமீபத்தில் முதுகுப்பகுதியில் காயமடைந்த அவர் தனது பிட்னஸை கருத்தில் கொண்டு சிவப்பு பந்து கிரிக்கெட்டிலும் சரி, உள்ளூர் போட்டிகளிலும் சரி சில காலம் தன்னை தேர்வுசெய்ய வேண்டாம் என்று நிர்வாகத்திடம் கேட்டுக்கொண்டார்.
அதேவேளையில் இந்திய அணிக்காக வெள்ளை பந்து கிரிக்கெட்டில் விளையாட விருப்பம் தெரிவித்தார். அவரது அந்த கோரிக்கையை ஏற்ற கிரிக்கெட் வாரியமும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்ததோடு சேர்த்து அவருக்கு ஒருநாள் போட்டிகளுக்கான துணை கேப்டன் பதவியையும் வழங்கியிருந்தது.
இப்படி ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு வழங்கப்பட்டதோடு சேர்த்து துணை கேப்டன் பதவியும் வழங்கப்பட்டாலும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இந்திய டி20 அணியில் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும் என்றும் அதற்காக கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள் என்று ஷ்ரேயாஸ் ஐயருக்கு முன்னாள் இந்திய வீரரான முகமது கைப் அறிவுரை கூறியுள்ளார்.
இதையும் படிங்க : நடப்பு 2025 ஆம் ஆண்டின் சிறந்த பவுலராக முகமது சிராஜ் நிகழ்த்திய அசத்தல் சாதனை – விவரம் இதோ
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : ஷ்ரேயாஸ் ஐயரை பற்றி பேசுவதில் மகிழ்ச்சி. தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்த அவர் 2023 உலககோப்பை தொடரிலும் சிறப்பாக விளையாடியிருந்தார். அதேபோன்று 3 அணிகளை ஐ.பி.எல் இறுதிப்போட்டிக்கு கேப்டனாக அழைத்துச் சென்றுள்ளார். இப்படி தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு வரும் உங்களுக்கு நிச்சயம் டி20 அணியிலும் நல்ல எதிர்காலம் உள்ளது. கண்டிப்பாக உங்களுக்கு இந்திய டி20 அணியில் இருந்து அழைப்பு வரும். அதற்காக கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள் என்று ஷ்ரேயாஸ் ஐயருக்கு முகமது கைப் அறிவுரை கூறியுள்ளது குறிப்பித்தக்கது.