
இந்திய அணியின் நட்சத்திர மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான துணை கேப்டனுமான ஷ்ரேயாஸ் ஐயர் அண்மையில் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்த போது கேட்ச் பிடிக்கையில் விலா எலும்பில் காயமடைந்து வெளியேறினார். அதன் பின்னர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை மேற்கொண்ட அவர் தற்போது அந்த காயத்திலிருந்து மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்.
ஆனாலும் அவரது காயம் குணமடைய இன்னும் சில வாரங்கள் ஆகும் என்பதனால் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அவரால் பங்கேற்ற விளையாட முடியாது என்று ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன. அதனால் ஜடேஜா இந்திய ஒருநாள் அணியின் துணை கேப்டனாக செயல்படுவார் என்று தெரிகிறது.
இந்நிலையில் ஷ்ரேயாஸ் ஐயர் அப்படி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை தவறவிடும் பட்சத்தில் அவருக்கு பதிலாக இந்திய அணியில் விளையாடப் போகும் வீரர் யார்? என்பது குறித்த கேள்வி பலரது மத்தியிலும் இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் களமிறங்க பல்வேறு இளம் வீரர்களுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இவ்வேளையில் தற்போது இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப் ஷ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக விளையாடப்போகும் வீரர் யார்? என்பது குறித்த தனது கணிப்பினை வெளிப்படுத்தி உள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது மிடில் ஆர்டரில் யார் மாற்றுவீரராக அணியிலிருந்தாரோ அவரே இந்த தொடரிலும் இடம்பெற வேண்டும்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய தொடரில் மாற்றுவீரராக துருவ் ஜுரேல் தான் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் ஷ்ரேயாஸ் ஐயரின் இடத்தில் வாய்ப்பினை பெற வேண்டும். ஏனெனில் இந்திய அணியின் நிர்வாகம் புதிதாக ஒரு திறமையை தேர்ந்தெடுத்து அவரை வளர்ப்பதை விட அணியில் ஏற்கனவே இருக்கும் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களின் திறமையை பிரகாசிக்க வைக்க வேண்டும்.
இதையும் படிங்க : ரோஹித் சர்மாவை பின்னுக்கு தள்ளிய நியூசிலாந்து வீரர்.. 22 நாளில் முடிவுக்கு வந்த முதலிடம் – விவரம் இதோ
அந்த வகையில் ஒருநாள் போட்டிகளுக்கான நான்காம் இடத்தில் துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பினை வழங்க வேண்டும். அப்படி விளையாடினால் அவருக்கும் நல்ல நம்பிக்கை கிடைக்கும். அதேபோன்று தேவையான நேரத்தில் சுழற்சி முறையில் நான்காவது இடத்தில் விளையாடும் வீரர்களை மாற்றியும் பயன்படுத்திக் கொள்ளலாம் என முகமது கைஃப் கூறியது குறிப்பிடத்தக்கது.