
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் விளையாடிய 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2 – 1 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது. இருப்பினும் கடைசிப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு பேட்டிங்கில் விராட் கோலி 74*, ரோஹித் சர்மா 121* சதத்தை அடித்து முக்கிய பங்காற்றினார்கள்.
அதனால் 2027 உலகக் கோப்பைக்கு முன் தங்களை கழற்றி விட நினைக்கும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழுவுக்கு அவர்கள் தக்க பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் இந்திய அணியில் விராட், ரோஹித்தை கழற்றி விட கௌதம் கம்பீர் காத்திருப்பதாக முன்னாள் வீரர் முகமது கைஃப் தெரிவித்துள்ளார். எனவே இனிமேல் நாம் இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பைப் பெறுவது நம்முடைய கையில் இருக்கிறது என்பதை அவர்கள் புரிந்து கொண்டுள்ளதாகவும் ஃகைப் தெரிவித்துள்ளார்.
அதனாலேயே சிட்னி போட்டி முடிந்த பின் கௌதம் கம்பீருடன் அவர்கள் பெரிதாக பேசவில்லை என்றும் ஃகைப் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலி போட்டி முடிந்த பின் யாரோ ஒருவரிடம் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். ரோஹித் சர்மா ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருதை வென்ற பின் கௌதம் கம்பீரை கடந்து சென்றார்”
“அவர்கள் வேண்டுமானால் சிரிப்பை பரிமாரிக் கொண்டிருக்கலாம். ஆனால் ரோஹித் சர்மா அவரைக் கடந்து சென்றார். இதிலிருந்து தங்களுடைய மரியாதை தங்களின் கையில் மட்டுமே இருக்கிறது என்பதை விராட், ரோஹித் ஆகியோர் உணர்ந்துள்ளது தெளிவாகத் தெரிகிறது. குறிப்பாக நான் ரன்கள் அடித்தால் தாமாக விளையாடுவேன் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்”
“நீங்கள் புதிய வீரராக இருக்கும் போது அணியில் யாருமே தெரியாது என்பதால் தொடர்ச்சியாக விளையாட வேண்டுமெனில் தொடர்ந்து அசத்த வேண்டும் என்பதை அறிந்திருப்பீர்கள். தற்போது அவர்கள் தங்களுடைய கேரியரின் துவக்கத்தில் இருந்த அதே அணுகுமுறையை மீண்டும் பின்பற்ற உள்ளனர். இந்தியாவுக்காக விளையாடும் யாரும் இங்கே நண்பர்கள் கிடையாது என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்கள்”
இதையும் படிங்க: நேரலையில் அழுத ஆஸி வர்ணனையாளர்.. இனிமேல் விராட், ரோஹித்தை பார்க்க முடியாது.. உருக்கமான வர்ணனை
“சிலர் நீங்கள் சரிவடையும் போது உங்களை அணியிலிருந்து நீக்குவதற்காக காத்திருக்கும் சூழ்நிலையில் இருப்பதற்கு பெயர் அணி விளையாட்டு கிடையாது” என்று கூறினார். இதைத் தொடர்ந்து விராட் கோலி, ரோஹித் சர்மா அடுத்த மாதம் தென்னாபிரிக்காவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெறும் ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.