மும்பையை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் சர்பாராஸ் கான் மிகுந்த போராட்டத்திற்குப் பின் இந்திய அணியில் வாய்ப்பு பெற்றுள்ளார். ஏனெனில் உள்ளூர் கிரிக்கெட்டில் கடந்த 4 – 5 வருடங்களாக அவர் தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்து வந்தார். இருப்பினும் ரகானே மற்றும் புஜாரா உள்ளிட்ட சீனியர்கள் இருந்ததால் தேர்வுக் குழுவினர் அவரை தொடர்ந்து புறக்கணித்து வந்தது.
போதாகுறைக்கு சர்பராஸ் பார்ப்பதற்கு கொஞ்சம் பருமனாக இருக்கிறார். அதனால் நல்ல ஃபிட்னஸ் இல்லாதவரை அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காது என்ற செய்திகள் வெளி வந்தன. அப்போது திறமையை பார்க்காமல் ஃபிட்னஸ் அடிப்படையில் வாய்ப்பு கொடுக்கும் தேர்வுக்குழு பேசாமல் வீரர்களுக்கு பதிலாக பேஷன் ஷோவில் நடந்து வரும் மாடல்களை தேர்ந்தெடுக்கலாம் என்று சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்தார்.
இராணியில் இரட்டை சதம்:
அந்த நிலையில் ரகானே மற்றும் புஜாரா ஆகியோர் சமீப காலங்களில் சுமாராக செயல்பட்டனர். மறுபுறம் சர்பராஸ் கான் தொடர்ந்து அசத்தலாக விளையாடி வந்தார். அதன் காரணமாக கடந்த இங்கிலாந்து தொடரில் ரஹானே, புஜாராவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் அடுத்தடுத்த அரை சதங்கள் அடித்த சர்பராஸ் கான் இந்தியாவின் வெற்றியில் பங்காற்றி அசத்தினார்.
இருப்பினும் அடுத்து நடைபெற்ற வங்கதேச தொடரில் அவரை பெஞ்சில் அமர வைத்த இந்திய அணி நிர்வாகம் கேஎல் ராகுலுக்கு வாய்ப்பு கொடுத்தது. அந்த வாய்ப்பில் கேஎல் ராகுல் 3 இன்னிங்ஸில் 1 அரை சதம் மட்டுமே அடித்து தடுமாற்றமாகவே விளையாடினார். இதற்கிடையே இராணிக் கோப்பை 2024 உள்ளூர் டெஸ்ட் தொடர் லக்னோவில் நடைபெற்று வருகிறது.
பெஞ்சில் சர்பராஸ்:
அதில் மும்பை அணிக்காக விளையாடும் சர்பராஸ் கான் இரட்டை சதமடித்து 25 பவுண்டரி 4 சிக்ஸருடன் 222* ரன்கள் விளாசி அசத்தினார். அதன் வாயிலாக இராணி கோப்பையில் மும்பைக்காக இரட்டை சதமடித்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார். இந்நிலையில் இவ்வளவு திறமையை நிரூபித்தும் வங்கதேச தொடரில் சர்பராஸ் கானை பெஞ்சில் அமர வைக்க இந்திய அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் முகமது கைப் சாடியுள்ளார்.
இதையும் படிங்க: அந்த 2 சம்பவதுக்கு அப்றம் தான் ஆஸ்திரேலியர்கள் இந்தியாவை மதிக்குறாங்க.. குறைச்சு எடை போடல.. விராட் கோலி
இது பற்றி ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “சர்பராஸ் கான் தனது வாழ்வில் நிறைய கடின காலங்களை கடந்துள்ளார். கடினமான சிறுவயது வாழ்க்கை, ஃபிட்னஸ் சம்பந்தமாக விமர்சனங்கள், உத்திரபிரதேசத்துக்காக விளையாடியதில் ஏமாற்றம் போன்ற பின்னடைவுகளை சந்தித்த அவர் ஒவ்வொரு முறையும் அதிலிருந்து திரும்பி வந்துள்ளார். இராணி கோப்பையில் அடித்த இரட்டை சதம் இந்தியா அவரை பெஞ்சில் அமர வைப்பதற்கு அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும் என்பதை காட்டுகிறது” என்று கூறினார்.



